அறுபடை வீடுகளில் மிக சக்தி வாய்ந்த, அதிசயம் வாய்ந்த இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகனுக்கு, பல வருடங்கள் கழித்து இன்று வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் இனிதே நிறைவடைந்தது. வேலை நிமித்தம் காரணமாக, இந்த கும்பாபிஷேகத்தை எங்களால் நேரில் சென்று தரிசனம் செய்ய முடியவில்லை, தொலைக்காட்சி பெட்டியிலும் இந்த கும்பாபிஷேக தரிசனத்தை காண தவறி விட்டோம் என்பவர்களாக நீங்கள் இருந்தால் கவலையே படாதீங்க.
நிறைய யூடியூப் சேனலில் இந்த வீடியோ இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் இந்த கும்பாபிஷேகத்தை நீங்கள் தரிசனம் செய்து அந்த முருகனின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம். எந்த நேரத்தில் முருகனை வழிபாடு செய்தாலும் அவன் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த ஒரு மண்டலத்திற்கு, 48 நாட்களும் திருச்செந்தூரில் திருவிழா கோலம் தான். முடிந்தால் இந்த 48 நாளில் ஒரு நாள் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யலாம். வயதானவர்கள், கூட்ட நெரிசலில் குழந்தையை வைத்துக்கொண்டு செல்ல முடியாதவர்கள் எல்லாம், அதற்கும் கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருந்தபடியே அந்த திருச்செந்தூர் முருகப்பெருமானை அழைத்து வீட்டிலிருந்தபடியே அவனுடைய ஆசீர்வாதத்தை பெற செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இன்றிலிருந்து தொடர்ந்து 48 நாள் இந்த வழிபாட்டை உங்கள் வீட்டு பூஜை அறையில் நீங்கள் செய்தீர்கள் என்றால், அந்த திருச்செந்தூர் முருகப்பெருமான் நேரடியாக ஓடி வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் குடி கொள்வார். கட்டாயம் 48 நாள் இதை செய்யணும் என்ற அவசியமும் கிடையாதுங்க. உங்களால் முடிந்தால் மட்டும் தான். முடியாதவர்கள் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இந்த 48 நாளில் எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் இந்த வழிபாட்டை செய்யலாம். ஒரே ஒரு நாள்தான் இந்த வழிபாட்டை செய்ய முடியும் என்றால் ஒரே ஒரு நாள் மட்டும் இந்த வழிபாட்டை செய்து பலன் பெறுங்கள்.
திருச்செந்தூர் முருகன் வழிபாடு
பூஜை அறையை சுத்தம் செய்து முருகனது திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்துவிட்டு, அரிசி மாவால் பூஜை அறையில் நட்சத்திர கோலம் போட வேண்டும். அதில் சரவணபவ என்று எழுத வேண்டும். சரவணபவ கோலத்தை போட்டு பூஜை அறையில் முருகப்பெருமானை அழைத்தால் எங்கிருக்கும் முருகப்பெருமானும் ஓடோடி வந்து அந்த கோலத்தில் அமர்ந்து கொள்வார் என்பது நம்பிக்கை.
முருகப்பெருமானுக்கு உங்களால் முடிந்த நெய்வேதியத்தை வைத்துவிட்டு, நெய் தீபம் ஏற்றி வைத்து முருகா முருகா என்று அழைத்தாலே முருகப்பெருமான் ஓடோடி வந்து உங்களுக்கு காட்சி தந்துவிடுவார். இந்த சரவணபவ கோலத்தை போட்டுவிட்டு பூஜை அறையில் அமர்ந்து “திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ! கருணை கடலே கந்தா போற்றி!” என்ற கோஷத்தை சொல்லி “சரஹணபவ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து திருச்செந்தூர் முருகனை நினைத்து உங்கள் வீட்டிலேயே பூஜை செய்யுங்கள்.
உங்களால் தினமும் பூஜை அறையில் பூஜை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த சரவணபவ நட்சத்திர கோலத்தை கலைக்காதீர்கள். இந்த 48 நாளும், அதாவது திருச்செந்தூர் கும்பாபிஷேகம் நடைபெற்ற இன்று முதல், அடுத்த 48 நாட்களுக்கு உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சரவணபவ கோலம் இருக்கும் பட்சத்தில் முருகப்பெருமான் உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக தங்கி இருப்பார்.
வாரத்திற்கு ஒருமுறை பூஜை அறையை சுத்தம் செய்யும் போது பழைய கோலத்தை எடுத்துவிட்டு, மீண்டும் புது கோலத்தை போட்டு வைக்கலாம். தவறு ஒன்றும் கிடையாது. மேல் சொன்ன இந்த முறைப்படி இந்த 48 நாளும் திருச்செந்தூர் முருகனை நினைத்து வீட்டில் பூஜை செய்தால் நீங்கள் என்ன வேண்டுதலை அந்த முருகனிடம் கேட்டாலும், அது உடனே பலிக்கும். திருச்செந்தூர் முருகன் இப்போது ரொம்பவும் சந்தோஷமாக இருப்பார். என்ன வரத்தை கேட்டாலும் அவர் உங்களுக்கு வாரி வாரி கொடுக்கக்கூடிய மனநிலையில் இருப்பார்.
இதையும் படிக்கலாமே: திருச்செந்தூர் முருகப்பெருமான் திருப்புகழ்
முருகன் உங்கள் வீடு தேடி வருவார். அப்படி இருக்கும்போது இந்த வழிபாட்டு நாளை நாம் தவற விடலாமா. நிச்சயம் தவற விடக்கூடாது. அதி அற்புதமான இந்த வழிபாடு அனைவருக்கும் பயனுள்ள கையில் அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.