திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை

Thirukkural athikaram 103
- Advertisement -

அதிகாரம் 103 / Chapter 103 – குடிசெயல் வகை

குறள் 1021:
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்

மு.வ விளக்க உரை:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.

கலைஞர் விளக்க உரை:
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது

- Advertisement -

குறள் 1022:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி

மு.வ விளக்க உரை:
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

கலைஞர் விளக்க உரை:
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்

Thiruvalluvar

குறள் 1023:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்

மு.வ விளக்க உரை:
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

கலைஞர் விளக்க உரை:
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்

குறள் 1024:
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு

மு.வ விளக்க உரை:
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

கலைஞர் விளக்க உரை:
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்

Thiruvalluvar

குறள் 1025:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

மு.வ விளக்க உரை:
குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.

கலைஞர் விளக்க உரை:
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்

குறள் 1026:
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்

மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.

கலைஞர் விளக்க உரை:
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்

Thiruvalluvar

குறள் 1027:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை

மு.வ விளக்க உரை:
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.

கலைஞர் விளக்க உரை:
போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு

குறள் 1028:
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்

மு.வ விளக்க உரை:
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.

கலைஞர் விளக்க உரை:
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்

Thiruvalluvar

குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு

மு.வ விளக்க உரை:
தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?

கலைஞர் விளக்க உரை:
தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்

குறள் 1030:
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி

மு.வ விளக்க உரை:
துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.

கலைஞர் விளக்க உரை:
வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 103 – Thirukkural Kudiseyal Vagai in Tamil with meaning or Thirukkural Kudiseyal Vagai adhikaram in Tamil. It is also called as Thirukkural Kudiseyal Vagai lyrics or Thirukkural Kudiseyal Vagai kural in Tamil with meaning.

- Advertisement -