திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை

Thirukkural athikaram 61
- Advertisement -

அதிகாரம் 61 / Chapter 61 – மடி இன்மை

குறள் 601:
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்

மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

கலைஞர் விளக்க உரை:
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்

- Advertisement -

குறள் 602:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்

மு.வ விளக்க உரை:
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.

கலைஞர் விளக்க உரை:
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

Thiruvalluvar

குறள் 603:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து

மு.வ விளக்க உரை:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

கலைஞர் விளக்க உரை:
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்

குறள் 604:
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு

மு.வ விளக்க உரை:
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

கலைஞர் விளக்க உரை:
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்

Thiruvalluvar

குறள் 605:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

மு.வ விளக்க உரை:
காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

கலைஞர் விளக்க உரை:
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!

குறள் 606:
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது

மு.வ விளக்க உரை:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

கலைஞர் விளக்க உரை:
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்

Thiruvalluvar

குறள் 607:
இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்

மு.வ விளக்க உரை:
சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.

கலைஞர் விளக்க உரை:
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்

குறள் 608:
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்

மு.வ விளக்க உரை:
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

கலைஞர் விளக்க உரை:
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்

Thiruvalluvar

குறள் 609:
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்

மு.வ விளக்க உரை:
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

கலைஞர் விளக்க உரை:
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்

குறள் 610:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு

மு.வ விளக்க உரை:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

கலைஞர் விளக்க உரை:
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 61 – Thirukkural Madi inmai in Tamil with meaning or Thirukkural Madi inmai adhikaram in Tamil. It is also called as Thirukkural Madi inmai lyrics or Thirukkural Madi inmai kural in Tamil with meaning.

- Advertisement -