திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை

Thirukkural athikaram 89
- Advertisement -

அதிகாரம் 89 / Chapter 89 – உட்பகை

குறள் 881:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்

மு.வ விளக்க உரை:
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே.

கலைஞர் விளக்க உரை:
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்

- Advertisement -

குறள் 882:
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு

மு.வ விளக்க உரை:
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக.

கலைஞர் விளக்க உரை:
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Thiruvalluvar

குறள் 883:
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்

மு.வ விளக்க உரை:
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.

கலைஞர் விளக்க உரை:
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்

குறள் 884:
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்

மு.வ விளக்க உரை:
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.

கலைஞர் விளக்க உரை:
மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்

Thiruvalluvar

குறள் 885:
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்

மு.வ விளக்க உரை:
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.

கலைஞர் விளக்க உரை:
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்

குறள் 886:
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது

மு.வ விளக்க உரை:
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

கலைஞர் விளக்க உரை:
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்

Thiruvalluvar

குறள் 887:
செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

மு.வ விளக்க உரை:
செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.

கலைஞர் விளக்க உரை:
செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்

குறள் 888:
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி

மு.வ விளக்க உரை:
உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.

கலைஞர் விளக்க உரை:
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்

Thiruvalluvar

குறள் 889:
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு

மு.வ விளக்க உரை:
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.

கலைஞர் விளக்க உரை:
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்

குறள் 890:
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று

மு.வ விளக்க உரை:
அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

கலைஞர் விளக்க உரை:
உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 89 – Thirukkural Uṭpakai in Tamil with meaning or Thirukkural Uṭpakai adhikaram in Tamil. It is also called as Thirukkural Uṭpakai lyrics or Thirukkural Uṭpakai kural in Tamil with meaning.

- Advertisement -