திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை

Thirukkural athikaram 68
- Advertisement -

அதிகாரம் 68 / Chapter 68 – வினை செயல்வகை

குறள் 671:
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

மு.வ விளக்க உரை:
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.

கலைஞர் விளக்க உரை:
ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும் முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்

- Advertisement -

குறள் 672:
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

மு.வ விளக்க உரை:
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.

கலைஞர் விளக்க உரை:
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது

Thiruvalluvar

குறள் 673:
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

மு.வ விளக்க உரை:
இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.

கலைஞர் விளக்க உரை:
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும் இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்

குறள் 674:
வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்

மு.வ விளக்க உரை:
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க)

கலைஞர் விளக்க உரை:
எற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்

Thiruvalluvar

குறள் 675:
பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

மு.வ விளக்க உரை:
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.

கலைஞர் விளக்க உரை:
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

குறள் 676:
முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

மு.வ விளக்க உரை:
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.

கலைஞர் விளக்க உரை:
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்

Thiruvalluvar

குறள் 677:
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்

மு.வ விளக்க உரை:
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.

கலைஞர் விளக்க உரை:
ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

குறள் 678:
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

மு.வ விளக்க உரை:
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

கலைஞர் விளக்க உரை:
ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

Thiruvalluvar

குறள் 679:
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

மு.வ விளக்க உரை:
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.

கலைஞர் விளக்க உரை:
நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்

குறள் 680:
உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து

மு.வ விளக்க உரை:
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.

கலைஞர் விளக்க உரை:
தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 68 – Thirukkural Vinai Seyalvagai in Tamil with meaning or Thirukkural Vinai Seyalvagai adhikaram in Tamil. It is also called as Thirukkural Vinai Seyalvagai lyrics or Thirukkural Vinai Seyalvagai kural in Tamil with meaning.

- Advertisement -