தித்திக்கும் திருபாகம் செய்முறை

thirupagam
- Advertisement -

நாளைய தினம் தைப்பூசம். முருகப் பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பலரும் முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள். அப்படி வழிபாடு மேற்கொள்ளும் பொழுது முருகப்பெருமானுக்கு பிடித்தமான நெய்வேத்தியங்களை வைத்து வழிபாடு செய்வார்கள். இப்படி அவருக்கு பிடித்த நெய்வேத்தியங்களை நாம் வைத்து வழிபாடு செய்யும்பொழுது அவர் மனம் குளிர்ந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

அந்த வகையில் முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான பொருளாக கருதப்படுவது திணை மாவு. திணை மாவையும் தேனையும் கலந்து வைத்து முருகப்பெருமானுக்கு வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளை நம்மால் விரைவிலேயே பெறமுடியும். இதற்கு அடுத்தார் போல் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு நெய்வேத்தியமாக செய்து தரக்கூடியது தான் திருபாகம். இந்த திருபாகம் பொதுவாக எந்த இனிப்பு கடைகளிலும் கிடைக்காது. திருச்செந்தூரில் சிறப்பாக செய்யக்கூடிய இந்த நெய்வேத்தியத்தை நாமும் நம் வீட்டில் செய்து வைத்து வழிபடும்பொழுது முருகப்பெருமானின் அருளை நம்மால் பெற முடியும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் திருச்செந்தூர் ஸ்பெஷல் திருபாகம் செய்வது எப்படி என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு – 1 கப்
  • சர்க்கரை – 1 1/2 கப்
  • பால் – 1 கப்
  • குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
  • நெய் – 1 கப்
  • முந்திரி – 1/2 கப்
  • ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
  • பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு அகலமான அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் குங்குமப்பூ, கடலை மாவு, சர்க்கரை, பால் இவற்றை சேர்த்து கட்டி விழாத அளவிற்கு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்படி கலந்த பிறகு தான் நாம் அடுப்பில் எடுத்து வைக்க வேண்டும். அடுப்பில் வைத்துக் கொண்டு கலந்தால் சில நேரங்களில் கட்டிகள் விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

முந்திரி பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிரண்டாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும். குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிண்ட வேண்டும். நெய்யை அவ்வப்பொழுது இரண்டு ஸ்பூன் என்ற வீதம் சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த கடலை மாவு கெட்டியாக ஆரம்பித்த பிறகு நாம் உடைத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பையும் அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

- Advertisement -

நெய் நன்றாக பிரிந்து வந்த பிறகு அதில் ஏலக்காய் தூள் அல்லது பச்சை கற்பூரம் இரண்டில் ஏதாவது ஒன்றைப் போட்டு நன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். மிகவும் குறைந்த நேரத்தில் அருமையான சுவையில் இருக்கக்கூடிய திருபாகம் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான ராகி சப்பாத்தி செய்முறை

எளிமையாக செய்யக்கூடிய இந்த திருபாகத்தை நாமும் வீட்டில் செய்து முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபட்டு முருகனின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

- Advertisement -