காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. காலையில் ராஜாவைப் போல் உண்ண வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த அளவிற்கு காலையில் ஆரோக்கியமான சத்து நிறைந்த உணவுகளை உண்கிறோமோ அந்த அளவிற்கு அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் திகழ்வோம் என்பதுதான் இதற்கு காரணம். அந்த வகையில் ஆரோக்கியமான ராகி மாவை வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
எப்பொழுதும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று நாம் காலை உணவை மேற்கொள்வோம். அப்படி நாம் மேற்கொள்ளும் பொழுது அதில் ஏதாவது ஒரே ஒரு பொருளை மட்டுமாவது மாற்றி ஆரோக்கியமான டிபன் ஆக மாற்றிக் கொள்ளலாம். அந்த வகையில் சாதாரணமாக நாம் செய்யும் சப்பாத்தியை ஆரோக்கியமான ராகி சப்பாத்தியா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – 1 இன்சு
- கருவேப்பிலை – 2 இனுக்கு
- கேரட் – 1
- வேகவைத்த உருளைக்கிழங்கு – 1
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- ராகி மாவு – 1 1/2 கப்
- அரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- வேர்கடலை தூள் – 3 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை இவை மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இஞ்சியின் பச்சை வாசனை நீங்கிய பிறகு துருவி வைத்திருக்கும் கேரட் மற்றும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை, மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
கேரட் வெந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது ஒரு பவுலை எடுத்து அதில் ராகி மாவை சேர்க்க வேண்டும். ராகி மாவு இல்லாதவர்கள் கோதுமை மாவையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் அரிசி மாவையும் சேர்த்து மிளகாய் தூள், உப்பு, வதக்கி வைத்திருக்கும் அந்த காய்கறி விழுது, ஒன்று இரண்டாக உடைத்து வைத்திருக்கும் வேர்க்கடலை, கொத்தமல்லி தளையையும் அதில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பிறகு சிறிது சிறிதாக தண்ணீரை தெளித்து மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு வாழை இலையை எடுத்து அதில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி நன்றாக தடவி விட்டு அதற்கு மேல் நாம் பிணைந்து வைத்திருக்கும் மாவை சிறு உருண்டையாக எடுத்து நன்றாக மெல்லியதாக தட்டிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் சப்பாத்தி சுடும் கல்லை வைத்து கல் நன்றாக சூடான பிறகு நாம் தட்டி வைத்திருக்கும் இந்த சப்பாத்தியை கல்லில் போட்டு இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றி நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிகவும் ஆரோக்கியமான சுவையான ராகி சப்பாத்தி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: சுண்டைக்காய் சட்னி செய்முறை
எப்பொழுதும் ஒரே மாதிரி சப்பாத்தி செய்யாமல் இப்படி காய்கறிகள் கலந்த சப்பாத்தியை செய்து தரலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தனிப்பட்ட முறையில் எந்த சட்னியும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.