பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவோம். அப்படி ஆசைப்படும் ஆலயங்களில் ஒன்றுதான் திருப்பதி. அங்கு இருக்கக்கூடிய வெங்கடாசலபதியை வழிபடுபவர்களுக்கு செல்வநிலை உயரும், தொழில் வளமும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த ஆலயத்திற்கு நினைத்த உடனே செல்ல முடியாது. பெருமாளின் அருள் இருந்தால் மட்டும்தான் அங்கு செல்ல முடியும்.
பலர் மாதத்தில் ஒரு முறையாவது அந்த ஆலயத்திற்கு செல்வார்கள். இன்னும் சிலரோ வருடத்திற்கு ஒரு முறையாவது பெருமாளை தரிசனம் செய்வார்கள். இன்னும் சிலர் முன்பெல்லாம் சென்றேன் இப்பொழுது செல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதுவரை ஒரு முறை கூட திருப்பதிக்கு சென்றதே இல்லை, ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்தாலும் அதில் ஏதாவது ஒரு தடை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்பவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து அது ஏதாவது ஒரு ரூபத்தில் தடைப்பட்டு இருக்கும் பட்சத்தில் அந்த தடைகளை நீக்குவதற்கு வீட்டில் பெருமாளை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை பெருமாளுக்கு உகந்த நாட்களாக கருதப்படுவது சனிக்கிழமை, திருவோண நட்சத்திரம், இரண்டு ஏகாதேசி போன்ற தினங்களில் செய்ய வேண்டும். மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு இட்லி பூ தேவை. வேறு எந்த பூவும் பயன்படுத்தக்கூடாது. நாம் வழிபாடு செய்யக்கூடிய நேரமானது காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் அல்லது மதியம் 11:00 மணியிலிருந்து 12:00 மணிக்குள் செய்ய வேண்டும்.
ஒரு பெரிய அகண்ட மண் விளக்கையும் அதில் தீபம் ஏற்றுவதற்கு கனமான திரியையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வழிபாடு செய்யக் கூடிய அன்றைய தினம் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாள் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு முன்பாக ஒரு தாம்பாளத்தை வைத்து அதற்கு மேல் அந்த அகண்ட விளக்கை வைத்து அது நிறைய நெய் ஊற்றி திரியை போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இட்லி பூவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக பெருமாளுக்கு ஒரு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இந்த நெய்வேத்தியத்தை ஒவ்வொரு முறை நாம் வழிபாடு செய்யும்பொழுதும் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி அதில் பச்சரிசி மாவை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். வாசம் வந்ததும் அதில் நாட்டு சக்கரையும் சேர்த்து நன்றாக வறுத்து வாசனைக்கு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு நெய்யில் வறுத்த முந்திரியையும் அதில் சேர்த்து நன்றாக கலந்து அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து பெருமாளுக்கு நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரே ஒரு துளசி இலையை வைக்க வேண்டும். இப்பொழுது விளக்கை ஏற்றுக் கொள்ளுங்கள். அடுத்ததாக “ஓம் நமோ வெங்கடேசாய நமஹ” என்னும் மந்திரத்தை 18 முறை கூறி இட்லி பூவால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அடுத்ததாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டிவிட்டு அந்த பிரசாதத்தை சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று கூறி நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
இப்படி வழிபாடு முடித்த பிறகு இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திக்கொண்டு “கோவிந்தா” என்னும் நாமத்தை ஏழு முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து முடித்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த அந்த மாவை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக தந்து நாமும் உண்ண வேண்டும். காலையில் ஏற்றக்கூடிய அந்த தீபமானது இரவு எட்டு மணி வரை அணையா தீபமாக எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை விலக உப்பு பிள்ளையார் வழிபாடு
இப்படி நாம் தொடர்ந்து ஒரு மாதம் அதாவது ஒரு மாதத்தில் வரக்கூடிய நான்கு சனிக்கிழமைகள், 2 ஏகாதேசி, ஒரு திருவோண நட்சத்திர நாளன்று பெருமாளை முழு மனதோடு நம்பிக்கையோடு வழிபட்டோம் என்றால் யாராவது ஒருவர் ரூபத்தில் பெருமாளே நம்மை திருப்பதிக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைப்பார்.