திருப்பதி போக வேண்டும் என்று நினைத்தாலே தடைகள் வருகிறதா? எந்த இடையூறும் தடையும் இல்லாமல் பெருமாளை தரிசனம் செய்வது எப்படி?

thirupathi-compressed
- Advertisement -

அந்த காலத்தில் திருப்பதிக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்றால் அது ஒரு பெரிய விஷயமாக பேசப்படும். இப்போதெல்லாம் நினைத்தால், நினைத்த உடனேயே திருப்பதிக்கு சென்று விட்டு வருகிறோம். ஆனால் பெருமாளை தரிசனம் செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. நாம் நினைத்தால் நம் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கோ அல்லது மற்ற கோவில்களுக்கும் செல்லலாம். ஆனால் பெருமாளே நினைத்தால் மட்டும் தான், நாம் அவரை தரிசனம் செய்ய முடியும் என்ற ஒரு கூற்றும் முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

நிறைய பேருக்கு திருப்பதி செல்வதற்கு நேரம் காலம் கைகூடி வராது. எப்போது திருப்பதி யாத்திரைக்கு செல்ல வேண்டுமென்று நினைத்தாலும் தடை வரும். எந்த தடையும் இல்லாமல் திருப்பதி பெருமாளை எப்படி தரிசனம் செய்வது.

- Advertisement -

திருப்பதி யாத்திரைக்கு செல்ல முடியவில்லை, பெருமாளை தரிசனம் செய்ய நேரமும் காலமும் கைகூடி வர வேண்டும் என்றால், ஒரு சிறிய மண் உண்டியலை வாங்கி வையுங்கள். அந்த உண்டியலுக்கு மேலே ஒரு நாமத்தை போடுங்கள். அதில் தினம்தோறும் ஒரு ரூபாய் செலுத்தி வாருங்கள். ‘பெருமாளே உன்னை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும். திருமலைக்கு வந்து உன்னை காண கூடிய பாக்கியத்தை எனக்கு தரவேண்டும், கோவிந்தா கோவிந்தா’ என்று அவனுடைய நாமத்தை உச்சரித்து தினம்தோறும் வேண்டிக் கொள்ளுங்கள். திருப்பதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வந்ததும் நீங்கள் சேகரித்து வைத்த மண் உண்டியல் பணத்தை அப்படியே திருப்பதி உண்டியலில் சேர்த்து விடுங்கள். (இப்படி வேண்டிக்கொண்டால் சீக்கிரம் பெருமாளை பார்க்கக் கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும்.)

திருப்பதிக்கு முறையாக யாத்திரை எப்படி செல்ல வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பும்போது பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பின்பும் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் இந்த தாம்பூலத்தை பூஜை அறையில் வைத்துவிட்டு, தடங்கல் இல்லாமல் ஏழுமலையான் தரிசனத்தை பெற வேண்டுமென்று மனதார எம்பெருமானை வேண்டிக்கொண்டு வீட்டிலிருந்து யாத்திரைக்கு புறப்பட வேண்டும். ஏற்றிய தீபத்தை மறக்காமல் மலை ஏற்றி விடுங்கள்.

- Advertisement -

திருப்பதிக்கு போகும் போது முதலில் அலமேலுமங்கையை தரிசனம் செய்துவிட்டு, தான் மேல் திருப்பதிக்குச் செல்ல வேண்டும். கீழே தாயாரிடம் முதலில் உங்களுடைய மன கவலைகளை சொல்லிவிடுங்கள். தாயார் எல்லா விஷயங்களையும் பெருமாளிடம் சொல்லி உங்களுடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பார்கள். தாயாரை தரிசனம் செய்யாமல் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்வது முழு பலனை நமக்கு கொடுக்காது.

அலமேலு மங்காபுரதில் இருக்கும் தாயாரை தரிசனம் செய்துவிட்டு அடுத்தது திருப்பதி மலை ஏறவேண்டும். பாதயாத்திரை செய்தாலும் சரி, அல்லது வாகனத்தில் சென்றாலும் சரி, மலைக்கு மேலே ஏறும் பொழுது ஓம் நமோ வெங்கடேசாயா போற்றி! ஓம் நமோ நாராயணா! என்ற பெருமாளின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே செல்ல வேண்டும். மேல் திருப்பதிக்கு சென்ற உடன் தீர்த்தத்தில் முடிந்தவரை தலைக்கு குளிப்பது நல்லது. முடியாதவர்கள் குளத்தில் இருக்கும் தீர்த்த தண்ணீரை எடுத்து உங்களுடைய தலையில் ப்ரோக்ஷணம் செய்து கொள்ளுங்கள். அதாவது மூன்று முறை தலையில் தண்ணீரை தெளித்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு கட்டாயமாக வாராக மூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் பெருமாளிடம் சென்று உங்களுடைய வேண்டுதலை வைக்க வேண்டும். பெருமாளிடம் சென்று நம்முடைய கோரிக்கையை வைக்கும் அளவிற்கு தரிசன நேரம் நிச்சயமாகக் கிடைக்காது. பெருமாளை இரண்டு கண்களால் கண்குளிர பார்ப்பது என்பதே கொஞ்சம் கஷ்டம்தான்.

இருந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்தி கொண்டு பெருமாளை பார்க்கும்போது முதலில் அவளுடைய திருவடிகளைக் காண வேண்டும். பாதங்களை பார்த்தவுடன், அதன் பின்பு அவருடைய நெஞ்சில் குடி கொண்டிருக்கும் மகா லட்சுமி தாயாரை காண வேண்டும். அதன் பின்பு பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இவை அனைத்தும் ஒரு சில வினாடிகளில் நடக்க வேண்டுமென்றால் கொஞ்சம் சிரமம் தான். இருப்பினும் கொஞ்சம் முன்கூட்டியே பிளான் செஞ்சு பெருமாளின் இப்படி தரிசனம் செய்ய பார்த்துக்கோங்க. உங்களுடைய மூளையை அதற்காக தயார் செய்து வைத்துக் கொண்டு, பெருமாளை தரிசனம் செய்ய செல்லுங்கள்.

பெருமாளை தரிசனம் செய்து முடித்து விட்டீர்கள். ஆனால் அவரிடம் வேண்டுதலை வைக்க முடியவில்லை. என்ன செய்வது, கோவில் பிரகாரத்தில் வேறு எந்த இடத்தில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை சொன்னாலும் அது அந்த பெருமாள் காதில் விழும். தரிசனத்தை நிறைவு செய்து கொள்ளுங்கள். மலையில் இருந்து கீழே இறங்கி வந்த பின்பு கோவிந்தராஜரை பார்த்து, பெருமாளை தரிசனம் செய்ததற்காக கோவிந்தராஜ பெருமாளுக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும். அதன் பின்பு மீண்டும் வீடு திரும்பலாம். வீட்டிற்கு வந்தவுடன் அடுத்த நாள் காலை குளித்து சுத்தமாகி விட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு நல்லபடியாக திருப்பதிக்கு சென்று வந்ததற்காக அந்த பெருமாளுக்கு நன்றிகளை தெரிவித்து, வெற்றிலை பாக்கு பழங்களை வைத்து இருக்கிறீர்கள் அல்லவா அதை எடுத்து அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

உங்களுடைய வீட்டின் அருகில் பெருமாள் கோவில் இருந்தாலும் சரி, சிவன் கோவில், விநாயகர் கோவில், அம்மன் கோவில், எந்த கோவில் இருந்தாலும் சரி அந்த கோவிலுக்கு சென்று இந்த வெற்றிலை பாக்கு பழத்தோடு உங்களால் முடிந்த தொகையை 11 ரூபாய் 51 ரூபாயோ வைத்து அந்த கோவிலில் இருக்கும் சுவாமிக்கு இதை கொடுத்துவிடவேண்டும்.

இந்த தாம்பூலத்தை அந்த கோவிலில் இருக்கும் புரோகிதருக்கு கொடுத்தாலும் நல்லதுதான். இவ்வாறு முறையாக திருப்பதிக்கு சென்று வந்தோம் ஆனால் நமக்குக் கிடைக்ககூடிய பலன் நிச்சயம் இரட்டிப்பாக கிடைக்கும். பெரும்பாலும் யாரும் இதை பின்பற்றுவது கிடையாது. நேரடியாக மேல் திருப்பதி செல்கிறார்கள். பெருமாளை சேவித்து விட்டு வந்து விடுகிறார்கள். அதில் எந்த ஒரு தவறும் இல்லை என்றாலும், முறைப்படி பெருமாளை தரிசனம் செய்வதே சிறந்தது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -