துளசி கல்யாணம் வழிபாட்டு முறை.

thulasi kalyanam
- Advertisement -

புனிதமான செடிகளின் வரிசையில் முதலிடம் பிடிக்கக்கூடிய செடியாக திகழ்வது துளசி செடி. இந்த துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. துளசிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் திருமணம் நடந்த நாளை தான் துளசி கல்யாணம் என்று கூறுகிறார்கள். அந்த நாளில் வீட்டிலேயே துளசி கல்யாணத்தை செய்து பார்த்தால் அனைத்து விதமான மங்களங்களையும் பெற முடியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் துளசி கல்யாணத்தை செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஐப்பசி மாதம் வரும் அமாவாசை நாளிலிருந்து 12-வது நாள் வரக்கூடிய துவாதசி அன்றுதான் துளசி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இந்த வருடம் நாளை 24.11.2023 அன்று வருகிறது. இந்த நாளில் நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடிக்கு நாம் பூஜை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளையும் பெற முடியும்.

- Advertisement -

இந்த திருமணத்தை விடியற்காலை 3 மணியிலிருந்து ஆறு மணிக்குள் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள்ளாகவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடி போதுமானது தான். துளசி செடி இல்லாதவர்கள் துளசி இலைகளை பறித்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்தும் பூஜை செய்யலாம்.

முதலில் ஒரு வெற்றிலையில் சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைத்து மலர்கள் மற்றும் அருகம்புல்லால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட வேண்டும். பிறகு துளசி செடி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து மாக்கோலம் போட வேண்டும். அடுத்ததாக துளசி செடி வைத்திருக்கும் தொட்டிக்கு அல்லது மாடத்திற்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும். பிறகு ஒரு சுத்தமான செம்பில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை சிறுதுளி அளவு கலந்து துளசிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

- Advertisement -

வீட்டில் மகாவிஷ்ணுவின் சிலையோ அல்லது புகைப்படமும் இருந்தால் அதை எடுத்து வந்து துளசி செடிக்கு அருகில் வைத்துவிட்டு அந்த சிலைக்கும் மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பிறகு மலர்களால் துளசி செடியையும், மகாவிஷ்ணுவின் புகைப்படத்தையும் அலங்காரம் செய்ய வேண்டும். துளசி செடிக்குரிய மந்திரங்களையும் பாடல்களையும் உச்சரித்த வண்ணம் துளசி செடிக்கும் மகாவிஷ்ணுவிற்கும் உதிரி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நெய்வேத்தியமாக கற்கண்டு உலர் திராட்சை பேரிச்சம்பழம் போன்றவற்றை வைத்து, வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து, ஊதுபத்தி தூபம் காட்டி ஐந்து பெரிய நெல்லிக்காய்களை எடுத்து அதில் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மகாவிஷ்ணுவின் சிலையோ புகைப்படமோ இல்லாதவர்கள் மகாவிஷ்ணுவின் அம்சமான பெரிய நெல்லிக்காய் மரத்திலிருந்து ஒரு சிறிய கிளையை எடுத்து வந்து துளசி செடியுடன் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளும் துர் தேவதைகளும் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் எந்தவித தங்கு தடைகளும் இன்றி நடைபெறும். செல்வ செழிப்பு மேலோங்கும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: செய்வினையை உடைத்தெறியும் வாராகி வழிபாடு

எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த துளசி திருமணத்தை நாமும் நம் இல்லங்களில் நம்பிக்கையுடனும் முழுமனதுடனும் செய்து நற்பலன்களை அடைவோம்.

- Advertisement -