அசல் திருநெல்வேலி அல்வாவை சுலபமா வீட்டிலேயே செய்யலாம் வாங்க

Tirunelveli halwa
- Advertisement -

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவு ஃபேமஸாக இருக்கும். சில ஊர்களின் பெயரை சொன்னாலே அந்த ஊரில் பேமஸான உணவுகள் நமக்கு ஞாபகத்திற்கு வரும். அப்படி காலம் காலமாய் அல்வாவுக்கு பேர் போன ஊர் திருநெல்வேலி. அங்கு செய்யும் இந்த அல்வாவின் சுவைக்கு வேறு எதுவும் ஈடாகாது. அப்படி ஒரு சுவையான அல்வாவை நாமும் வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

அசல் திருநெல்வேலி அல்வா செய்முறை விளக்கம்:

இந்த அல்வா செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் இரண்டு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதை மைதா மாவு வைத்தும் செய்யலாம். கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மாவு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 5 மணி நேரம் வரை அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஐந்து மணி நேரம் கழித்து இந்த மாவை எடுத்து கைகளாலே நன்றாக கரைத்து விடுங்கள். மாவு மொத்தமும் அந்த தண்ணீரில் கலந்து நமக்கு கோதுமை பால் கிடைத்து விடும். இதை முதலில் ஒருமுறை வடிகட்டி அதில் இருக்கும் திப்பிகளை தனியாக எடுத்து விடுங்கள். இதே போல் இரண்டு, மூன்று முறை வடிகட்டிய பிறகு கோதுமை பால் நமக்கு கிடைக்கும். இந்த பாலையும் மூடி போட்டு 8 மணி நேரம் வரை புளிக்க விட வேண்டும்.

எட்டு மணி நேரம் கழித்து கோதுமை பாலில் இருந்து தண்ணீர் மொத்தமும் மேலே வந்து அடியில் மாவு தங்கி இருக்கும். இப்பொழுது மேலே இருக்கும் தண்ணீரை மட்டும் கீழே ஊற்றி விட்டு மீதம் இருக்கும் மாவில் ஐந்து கப் புதிய தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இந்த பாலை வைத்து தான் நாம் அல்வா செய்ய போகிறோம்.

- Advertisement -

அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து ஒரு கப் சர்க்கரையை சேர்த்து அதை கேரமில் செய்ய வேண்டும். இந்த முறை தான் இதில் மிகவும் முக்கியமானது. இதை செய்யும் போது எந்த ஃபுட்கலரும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் அல்வாக்கு நல்ல ஒரு இனிப்பு தன்மையும், ருசியும் கிடைக்கும். சர்க்கரை நன்றாக உருகி தேன் கலர் வந்த பிறகு கரைத்து வைத்திருக்கும் கோதுமை பாலை இதில் ஊற்றி கலக்க வேண்டும். கோதுமை பாலை ஊற்றியவுடன் சர்க்கரை கட்டிப்படும் ஆனாலும் கைவிடாமல் கலந்து கொண்டே இருந்தால் கரைந்து விடும்.

நாம் ஊற்றிய கோதுமை பாலின் அளவானது பாதி அளவிற்கு சுண்டி வந்த பிறகு மீண்டும் ஒரு கப் சர்க்கரை கைப்பிடி அளவு முந்திரியை சின்னதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ரெண்டு ஏலக்காய் நசுக்கி போட்டு கை விடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த சமயத்தில் முக்கால் கப் நெய் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளை கொண்டைக்கடலை இருந்தா சூப்பரான இந்த சைவ கோலா உருண்டை ரெசிப்பியை இன்னைக்கே செஞ்சு அசத்துங்க!

அல்வாவை சிறிது நேரம் கைவிடாமல் கலந்து கொண்டிருக்கும் போது அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் இது தான் அல்வா தயாரானதற்கு சரியான பக்குவம். ஆனால் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் முக்கால் கப் நெய்யும் இதற்கு பயன்படுத்தி விட வேண்டும்.அவ்வளவு தான் அசல் திருநெல்வேலி அல்வா சூப்பராக நாம் வீட்டில் தயார் செய்து வைத்து விட்டோம். இந்த முறையில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க திருநெல்வேலியில் இருந்து வாங்கின அல்வாக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே இருக்காது.

- Advertisement -