நீங்கள் செய்யும் உப்புமா கடாயில் ஒட்டாமல் உதிரி உதிரியாக சுவையாக இருக்க இவ்வாறு செய்து பாருங்கள்

upma
- Advertisement -

காலை உணவு என்றாலே இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல் போன்ற உணவு வகைகள் தான் இருக்கும். அப்படி இல்லை என்றால் அவசரத்திற்கு செய்யக்கூடிய உப்புமாவை தான் அடிக்கடி பலரும் தங்கள் வீட்டில் செய்வார்கள். ஆனால் இந்த உப்புமாவை எவ்வாறு முறையாக செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரியாது. ஒரு சில வீடுகளில் பொங்கல் போன்று செய்து விடுவார்கள். இவ்வாறு செய்வதால் சாப்பிடுபவர்களுக்கு அதன் சுவை அவ்வளவாக பிடிக்காமல் போய்விடும். எனவே வீட்டில் அடிக்கடி செய்யக்கூடிய உப்புமாவை எவ்வாறு சுவையாகவும், கடாயில் ஒட்டாமல் உதிரி உதிரியாக செய்வது என்பதையும் பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

dosai

தேவையான பொருட்கள்:
ரவை – 11/4 கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 5, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து ஒன்னேகால் கப் ரவை மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து ரவையை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு தட்டில் மாற்றி வைத்து விடவேண்டும்.

ravai

பிறகு அதே கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொண்டு இவற்றுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ் இவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்கிய உடன் ஒரு கப் துருவிய தேங்காயையும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி காய்கள் வேகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

carrot1

அதன் பின்னர் வறுத்து வைத்துள்ள ரவையை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் தட்டை போட்டு மூடி வைக்க வேண்டும். பின்னர் 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அனைத்து கடாயை கீழே இறக்கி வைக்க வேண்டும்.

rava-upma2

அவ்வளவுதான் சுவையான ரவா உப்புமா தயாராகிவிட்டது. இவ்வாறு செய்வதால் சிறிதளவும் ஒட்டாமல் உதிரி உதிரியாக அருமையாக இருக்கும். இதனுடன் தொட்டுக்கொள்ள புதினா சட்னி அல்லது தேங்காய் சட்னி செய்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். ரவையுடன் தண்ணீர் சேர்க்கும் அளவு தான் மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள். நீங்கள் செய்யும் உப்புமாவும் கடாயில் ஒட்டாமல் உதிரி உதிரியாக இருக்கும்.

- Advertisement -