நியாயமான முறையில் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்து யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு அது திரும்ப கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக பிறரிடம் கொடுக்கக்கூடிய பணம் நம்மிடம் திரும்ப வந்து சேரவில்லை என்னும் பட்சத்தில் நாம் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்போம். ஒரு சிலர் வீட்டிற்கு தெரியாமல் கூட பிறரிடம் கொடுத்திருப்பார்கள். அதனால் கொடுத்ததை கூட குடும்ப நபர்களிடம் கூற முடியாமல் இருப்பார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு கோவில் பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீக குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வழிபாடு
கொடுத்த பணம் தொடர்பான பலவிதமான பிரச்சனைகளுக்கு காரணமாக திகழக்கூடியவர்கள் செவ்வாய் பகவான் என்று கூறி கேள்விப்பட்டு இருப்போம். அதனால் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுவார்கள். முருகப்பெருமானை வழிபாடு செய்வதை விட ஒரு சில குறிப்பிட்ட ஆலயங்களில் இருக்கக்கூடிய அம்மனை வழிபாடு செய்யும்பொழுது விரைவிலேயே நம்முடைய வேண்டுதல் நிறைவேறி விடும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தான் இந்த பதிவில் ஒரு ஆலயத்தை பற்றி பார்க்கப் போகிறோம்.
இந்த ஆலயம் திருச்சி மாவட்டத்தில் தென்னூர் என்னும் ஊரில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய அம்மனை உக்கிர காளியம்மன் என்று கூறுவார்கள். கோவிலுக்கு நாம் எந்த நாளில் வேண்டுமானாலும் செல்லலாம். அங்கு சென்று எப்போதும் போல் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்ளுங்கள். அம்மனுக்கு உங்களுடைய கைப்பட 51 எலுமிச்சம் பழங்களை மாலையாக கோர்த்து சாற்ற வேண்டும்.
பிறகு உங்களுடைய பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அங்கு அம்மன் திரிசூலத்திற்கு முன்பாக நின்று யார் உங்களுடைய பணத்தை வாங்கிவிட்டு திரும்பத் தராமல் கஷ்டப்படுத்துகிறார்களோ அவர்களின் பெயரை கூறி அவர்கள் விரைவில் பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறவேண்டும். இவ்வாறு கூறி முடித்துவிட்டு அம்மனை மூன்று முறை வலம் வந்து சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
முக்கியமான குறிப்பு நியாயமாக நாம் சம்பாதித்த பணமாக அந்த பணம் இருக்க வேண்டும். அதேபோல் சிறிதளவு மட்டும் கொடுத்துவிட்டு வட்டியோடு சேர்த்து அதிக அளவில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கூறக்கூடாது. அசல் தொகையை மட்டும் கூறி அது வந்தால் போதும் என்ற பூரணமான மனதிருப்தியோடு அம்மனிடம் கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அம்மனின் அருளால் விரைவிலேயே கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். பணம் திரும்ப கிடைத்த பிறகு மறுபடியும் இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனுக்கு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி தர வேண்டும்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை அதிகரிக்கும் அஷ்டமி தீபம்
எந்த ஒரு வேண்டுதலை நாம் செய்வதாக இருந்தாலும் அது நியாயமான வேண்டுதலாக இருந்தால் தான் முழுமையான பலனை தரும். அந்த வகையில் நியாயமான விதத்தில் நாம் கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு உக்கிர காளியம்மன் நமக்கு உதவி செய்வாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.