கையில் ஒட்டாமல் உதிரி உதிரியான ரவா உப்புமா இப்படித் தான் செய்வார்களோ? நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

ravai-uppuma
- Advertisement -

கொஞ்சம் கூட கையில் ஒட்டாமல் உதிரி உதிரியான ரவா உப்புமா சிலர் செய்து கொடுப்பதை பார்க்கும் பொழுதே நாவில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். ரவா உப்புமா எல்லோருக்கும் பிடித்த ஒரு டிபன் வகை என்றாலும், அதனை வெறுப்பதற்கு காரணம் அதை செய்யும் விதம் தான்! களி போல கிண்டி கொடுத்தால் பெரியவர்கள் மட்டுமல்ல, சிறு குழந்தை கூட உப்புமாவை வெறுத்துவிடும். உதிரி உதிரியான உப்புமா செய்வது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

உதிரி உதிரியான உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், தண்ணீர் – ஒன்றரை கப், சமையல் எண்ணெய் அல்லது நெய் – 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், துருவிய இஞ்சி – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு இணுக்கு, உப்பு – தேவையான அளவு, காய்கறிகள் – உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப.

- Advertisement -

உதிரி உதிரியான உப்புமா செய்முறை விளக்கம்:
உதிரி உதிரியான உப்புமா செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். வறுத்த ரவை வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் நீங்கள் உப்புமா செய்வதற்கு முன்பு ஒருமுறை வெறும் வாணலியில் போட்டு வறுக்க வேண்டும். ரவை சரியான பதத்திற்கு வறுபட்டதா? என்பதை அறிவதற்கு ஒரு ஓட்டை போட்ட ஜல்லி கரண்டியால் எடுத்துப் பாருங்கள். எடுத்ததும் உடனே ஓட்டைகளில் ரவை இறங்கினால் அவை நன்கு வறுபட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பின்னர் அதனை ஒரு தட்டில் மாற்றி வைத்து விட்டு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும், கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உங்கள் தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு பச்சை மிளகாயைக் கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். துருவிய இஞ்சி, ஒரு இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

- Advertisement -

வெங்காயம் அதிகம் வதக்க வேண்டிய அவசியமில்லை, லேசாக வதங்கி வந்ததும் அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சைப் பட்டாணி, கேரட், பீன்ஸ் சேர்த்தால் அருமையாக இருக்கும். காய்கறிகள் சேர்க்காமல் அப்படியே ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றலாம். காய்கறி சேர்ப்பவர்களாக இருந்தால் காய்கறிகளை போட்டு பாதி பதத்திற்கு நன்கு வதக்கிய பின்பு, தண்ணீரை சேர்க்க வேண்டும். தண்ணீர் சேர்ந்தவுடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை மூடி வைத்து தண்ணீர் ஒரு கொதி வரும் வரை காத்திருங்கள், ஒரே ஒரு கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும். ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கும் பொழுது அவை முழுவதும் உடனே உறிஞ்சி கொள்ளும். அதன் பிறகு மூடி வைக்க வேண்டும். 5 இலிருந்து 7 நிமிடம் மூடி வைத்தால் சரியாக இருக்கும். இடையிடையே நீங்கள் மூடியைத் திறந்து கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்தால் 15 நிமிடத்திற்குள் சுடச்சுட உதிரி உதிரியான ஒட்டாத உப்புமா தயார் ஆகிவிடும். இதே முறையில் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், உங்களுக்கும் உதிரியான உப்புமா கிடைக்கும்.

- Advertisement -