“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று கூறியவர் வள்ளலார். தன்னால் இயன்ற அளவு பிறருக்கு அன்னதானத்தை வழங்கியவராகவும் இன்றளவும் அவருடைய பெயரைக் கூறி அன்னதானம் நடைபெற்று வருகிறது என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வள்ளலார் ஜீவசமாதி அடைந்து ஜோதி ரூபமாக தரிசனம் தந்தது தைப்பூச நாள் அன்றுதான். அன்றைய தினத்தில் வீட்டின் எந்த முறையில் வள்ளலாரை வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வள்ளலார் ஜோதி வழிபாடு
பள்ளி செல்லும் பருவத்தில் பள்ளிக்குச் செல்லாமல் முருகனை தேடி கந்தகோட்டம் சென்று முருகனுக்காக பாடல் பாடியவர் தான் ராமலிங்க அடிகளார் என்று கூறக்கூடிய வள்ளலார். இறைவன் ஜோதி வடிவானவர் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இறைவனை நினைத்து 6000 பாடல்களை பாடினார். அந்த பாடல்களே இன்றளவும் திருவருட்பா என்ற நூலாக தொகுத்து உள்ளது. 156 ஆண்டுகள் அணியாமல் இன்றளவும் எரிகின்ற நெருப்பை மூட்டியவர் வள்ளலார் தான். அனைவருக்கும் பசி என்ற பிணி ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் ஏற்றிய அந்த அணையா அடுப்பு இன்றளவும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த வள்ளலாரை நாம் நம்முடைய வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வள்ளலார் ஜோதி வடிவமாகி இறைவனுடன் ஐக்கியமான நாள் தான் தைப்பூசம் என்பதால் இன்றளவும் தைப்பூச நாளில் வள்ளலாரின் ஆலயங்களில் ஜோதி வடிவத்தில் அவர் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் மதிய வேளையில் இந்த வழிபாட்டை செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஒரு வேளை மதிய வேளையில் இந்த வழிபாட்டை செய்ய இயலவில்லை என்னும் பட்சத்தில் காலையிலோ அல்லது மாலையிலோ இந்த வழிபாட்டை செய்யலாம். இதற்கு நாம் நம்முடைய வீட்டு பூஜை அறையில் தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபத்திற்கு முன்பாக உப்பில்லாத தயிர் சாதத்தை வைக்க வேண்டும்.
இப்படி வைத்து முடித்துவிட்டு அந்த தீபத்தை பார்த்தவாறு “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்னும் மந்திரத்தை 9 முறை கூற வேண்டும். இப்படி கூறி வழிபாடு செய்த பிறகு அந்த சாதத்தில் சிறிதளவு காக்கைக்கும், சிறிதளவு எறும்பிற்கும் பிறகு நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பகிர்ந்து உண்ண வேண்டும். அன்றைய தினம் தங்களால் இயன்ற அளவு அன்னதானத்தை செய்வது வள்ளலாரின் அருளை பரிபூரணமாக பெறச் செய்யும். மேலும் இப்படி நாம் வள்ளலாரை வழிபாடு செய்வதன் மூலம் நம்மிடமும் நம்மை சுற்றியும் இருக்கக்கூடிய தீய வினைகள் அனைத்தும் அகலும் என்றும் நேர்மையான நல்லெண்ணத்தோடு வாழ்வோம் என்றும் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பான பிரகாசமான எதிர்காலம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:நந்தீஸ்வரர் வழிபாடு
தீபம் எரிவதற்கு எண்ணெய் வேண்டும். ஆனால் வள்ளலாரோ தண்ணீர் ஊற்றி தீபத்தை பிரகாசமாக எரிய வைத்தார். அப்படிப்பட்ட வள்ளலாரை ஜோதி வடிவத்தில் நாம் வழிபாடு செய்து நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாக்கிக் கொள்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.