நம் குலத்தைக் காக்கக்கூடிய தெய்வமாக தான் குலதெய்வம் திகழ்கிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தை அனுதினமும் வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அனுதினமும் வழிபாடு செய்வதோடு நம்மால் இயன்ற முறை குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய அனைத்து விதமான வழிப்பாட்டு முறைகளையும் நாம் செய்தால் தான் நம்முடைய குலம் செழிக்கும், வம்சம் செழிக்கும் என்று கூறப்படுகிறது. எத்தனை தெய்வங்களை நாம் வழிபட்டாலும் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால்தான் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த குலதெய்வத்திற்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் வம்சம் செழிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு விரதத்தை இருந்தாலும், எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும், எந்த முயற்சிகளில் ஈடுபட்டாலும் இவை அனைத்தும் நமக்கு வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம்முடைய குலதெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும். எப்படி ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்கிறோமோ அதே போல் குலதெய்வத்தையும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் தான் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. மேலும் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்களையும் எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளில் இருந்தும் நம்மை பாதுகாக்க கூடிய தெய்வமாக தான் குலதெய்வம் திகழ்கிறது.
ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்ற ஒன்று இருக்கும். அது ஆண் தெய்வமாகவும் இருக்கலாம் பெண் தெய்வமாகவும் இருக்கலாம் ஒரு சிலருக்கு குலதெய்வம் எதுவென்றே தெரியாத ஒரு நிலையும் இருக்கும். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தை குலதெய்வமாக பாவித்து கொள்ளலாம் அல்லது மதுரையில் இருக்கக்கூடிய பதினெட்டாம்படி கருப்பை குலதெய்வமாக பாவித்து வழிபாடு செய்யலாம். பெண் தெய்வமாக இருக்கும் பட்சத்தில் பௌர்ணமி தினத்திலும் ஆண் தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அமாவாசை தினத்திலும் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு.
மாத மாதம் ஆலயத்திற்கு சென்றும் வழிபாடு செய்யலாம். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ சென்று வழிபாடு செய்யலாம். அப்படி குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய அனைத்து வழிபாட்டு முறைகளையும் செய்வதோடு இந்த ஒரு தீபத்தையும் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இதுவரை நாம் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்துமே நீங்கும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு ஐந்து தேங்காய் வேண்டும். இந்த ஐந்து தேங்காயும் சரிசமமாக உடைக்க வேண்டும். அப்பொழுது இதிலிருந்து பத்து மூடி தேங்காய் வரும். அதில் ஒன்பது மூடி தேங்காயை மட்டும் எடுத்து குலதெய்வத்திற்கு முன்பாக வைத்து அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு குலதெய்வத்திற்கு தேங்காய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். மீதம் இருக்கக்கூடிய ஒரு மூடியை யாருக்காவது தானமாக தரலாம்.
பிறகு குலதெய்வத்தை வணங்கச் செல்லும் பொழுது வெற்றிலை பாக்கு, ஒரு எலுமிச்சம் பழம் மற்றும் 101 ரூபாயை காணிக்கையாக குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து தரும்படி கேட்டு வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வத்தின் பாதத்தில் வைத்த எலுமிச்சம் பழத்தை அப்படியே எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைப்பதன் மூலம் குலதெய்வத்தை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வருவதற்கு சமமான ஒரு பலன் ஏற்படும். இந்த வகையில் நாம் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும்.
இதையும் படிக்கலாமே:பணத்தடை நீக்கும் ராகுகால தூபம்
அனைவரும் கண்டிப்பான முறையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்படி குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும்பொழுது இந்த முறையில் தீபம் ஏற்றி முழு மனதோடு வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய கஷ்டங்கள் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.