வண்டிக்கடை சுவையில் மிகவும் பிரமாதமான வெஜிடபிள் சால்னாவை உங்கள் வீட்டில் இப்படி சுலபமாக செய்திடுங்கள்

veg-salna
- Advertisement -

வெஜிடபிள் சால்னா  பரோட்டா,  தோசை,  இட்லி,  பூரி,  சப்பாத்தி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். காய்கறிகள் சேர்க்காமல் செய்யப்படும் சால்னாவை காட்டிலும், இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  இதில் நாம் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி,  காலிஃபிளவர் சேர்த்துள்ளேன். இதுதவிர பீன்ஸ், பீட்ரூட், ப்ராக்கோலி, போன்ற காய்கறிகளை சேர்த்து மேலும் ஆரோக்கியமான சால்னாவை செய்யலாம். சுவையான காய்கறி சால்னா நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பட்டை – 1 துண்டு, கிராம்பு – 4, ஏலக்காய் – 4,மிளகு – 1/2 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 1, துருவிய தேங்காய் – 3/4 கப், முந்திரி பருப்பு – 10, கசகசா – 1/2  ஸ்பூன், பிரிஞ்சி இலை –1, சோம்பு – 1/2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், புதினா – 1 கைப்பிடி, கொத்தமல்லி – 1 கைப்பிடி, உருளைக்கிழங்கு – 1, கேரட் – 2, காலிபிளவர் – சிறிதளவு, காய்ந்த பட்டாணி – 1/2 கப், உப்பு – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், கறி மசாலா தூள் – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
மசாலா விழுது அரைப்பதற்கு ஒரு பேனில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.  எண்ணெய் சூடானதும் சோம்பு 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், பட்டை 1 துண்டு, கிராம்பு 4, ஏலக்காய் 4, மிளகு  1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதனுடன் 10 – 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் 1  தக்காளி சேர்த்து,  மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

இந்த கலவையை ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் 5 ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 1  பிரிஞ்சி இலை, 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்கவும்அதனுடன் 1  பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் பாதியளவு வதங்கியதும் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1  கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து  பச்சை வாசனை போக வதக்கவும்.

- Advertisement -

பின்னர் 1 உருளைக்கிழங்கு, 2 கேரட் ஆகியவற்றை தோல் நீக்கி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்,  அதனுடன் சிறிதளவு காலிபிளவரை பூ போல நறுக்கி சேர்க்கவும், 8 மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பட்டாணியை சேர்த்துக் கொள்ளவும். காய்கறிகளை சேர்த்த பின்னர் மிதமான தீயில் வதக்கவும். இதனுடன்  தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1  ஸ்பூன் மிளகாய் தூள், 1/2  மல்லித் தூள், கறி மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். ஒரு முறை வதக்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுது சேர்த்துக் கொள்ளவும்நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் 3/4 கப் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 10  முந்திரிப் பருப்பு, 1/2  ஸ்பூன் கசகசாவை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் விழுதை வதக்கி வைத்துள்ள கலவையுடன் சேர்க்கவும். இப்பொழுது அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.  நன்றாக கலந்த பின்னர் மூடி வைத்து மிதமான தீயில் 20 முதல் 25 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் சிறிதளவு கொத்தமல்லியை பொடியாக தூவிக் கொள்ளவும். சுவையான வெஜிடபிள் சால்னா தயாராகிவிடும்.

- Advertisement -