- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீடு கட்ட சுக்கிர வழிபாடு

சொந்த வீடு கட்ட சுக்கிர வழிபாடு

- Advertisement -

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவை நனவாக்க, சுக்கிர பகவானின் அருள் மிகவும் அவசியம். சுக்கிரன் செல்வத்திற்கும், ஆடம்பரமான வாழ்க்கைக்கும், வீடு, வாகனம் போன்ற சுகங்களுக்கும் காரகன் ஆவார். சொந்தமாக நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்ற முயற்சிக்கு நல்ல பலன் தரும் சுக்கிர பகவானை வழிபடும் சில முறைகள் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

சுக்கிர பகவானுக்கு உரிய தெய்வம் மகாலட்சுமி. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தவறாமல் வழிபடுவது சுக்கிர யோகத்தை அதிகரிக்க உதவும். மகாலட்சுமி மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் (கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம்) பாராயணம் செய்வது நன்மை பயக்கும். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் சுக்கிர ஹோரை நேரத்தில் சுக்கிர பகவானை வழிபடுவது சிறந்தது. வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணி வரை, மதியம் 1 முதல் 2 மணி வரை, இரவு 8 முதல் 9 மணி வரை சுக்கிர ஹோரை அமையும். அந்த சமயத்தில் சுக்கிர பகவானுக்கு கற்கண்டு கலந்த பொங்கல், கற்கண்டு சாதம், வெள்ளை மொச்சை போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். மனதார சீக்கிரமே வீடு, வாகன பிராப்தம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெள்ளை நிற மலர்கள் (வெள்ளை தாமரை, மல்லிகை) சுக்கிரனுக்கு உகந்தவை. இவற்றை வைத்து வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகள், அரிசி, பால், சர்க்கரை, வெள்ளிப் பொருட்கள் போன்றவற்றை தானம் செய்வது சுக்கிரனின் அருளைப் பெற்றுத் தரும். அன்றைய தினம் சுக்கிரனை வழிபடும் பொழுது வெள்ளை நிற வஸ்திரம் உடுத்திக் கொள்ளுங்கள். சுக்கிர காயத்ரி மந்திரம் அல்லது சுக்கிரன் மூல மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பது பலன் தரும்.

சுக்கிர காயத்ரி மந்திரம்:
“ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்”

- Advertisement -

சுக்கிர பகவான் வழிபாட்டின் போது அகத்திக்கீரையை வைத்து, பூஜை முடிந்த பிறகு பசு மாட்டிற்கு வழங்குவது சுக்கிரனின் அருளைப் பெற உதவும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 90 நாட்கள் செய்வது நல்ல பலன்களைத் தரும். சொந்த வீடு அமைய சுக்கிர ஹோமம் செய்வது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும். இது சுக்கிரனின் நல்ல அதிர்வுகளை ஈர்த்து, வீடு வாங்கும் அல்லது கட்டும் யோகத்தை அளிக்கும். நவகிரக கோவில்களில் உள்ள சுக்கிர பகவான் சன்னதிக்குச் சென்று, ஒன்பது முறை வலம் வந்து வழிபடுவது நல்லது. சென்னை திருமயிலையில் உள்ள வெள்ளீஸ்வரன் ஆலயம் போன்ற சுக்கிர ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவது சிறந்தது. தமிழகத்தில் “வெள்ளீஸ்வரன்” என்ற பெயரில் அமைந்திருக்கும் ஆலயங்கள் அனைத்தும் சுக்கிரனுக்கு உரிய பரிகார ஸ்தலங்களாகும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் இருக்கும் தீய சக்தியை விரட்டி அடிக்க

ஜாதகத்தில் நான்காம் வீடு வசிப்பிடம், சொந்த வீட்டைக் குறிக்கிறது. நான்காம் வீடு பலமாக இருப்பதும், செவ்வாய் (பூமிக்கு காரகன்) மற்றும் சுக்கிரன் (கட்டிடத்திற்கு காரகன்) பலமாக இருப்பதும் சொந்த வீடு யோகத்திற்கு அவசியம். சுக்கிரன் ஆட்சி (ரிஷபம், துலாம்) அல்லது உச்சம் (மீனம்) பெற்று, சுப கிரகங்களின் பார்வை பெறுவது சொந்த வீடு அமைய சாதகமானது. மேற்கண்ட வழிபாட்டு முறைகளை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கடைபிடித்து வந்தால், சுக்கிர பகவானின் அருளால் சொந்த வீடு கனவு நிச்சயம் நிறைவேறும்.

சற்று முன்