வீட்டில் முறையாக பூஜை செய்வது எப்படி?

sivarathiri-poojai

வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நமக்கான கடமைகள் ஏராளம். காலையில் எழுந்தவுடன் அதற்கான பணிகளும் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம்  இறைவனுக்கு பூஜை செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தாலும், நம்மை படைத்த இறைவனுக்காக ஒரு ஐந்து நிமிடமாவது ஒதுக்கி எளிய முறையில் பூஜை செய்வதும் நம் கடமை தான். இறைவனை நம் வீட்டில் முறையாக வணங்குவது எப்படி என்பதைப் பற்றி  இந்த பதிவில் காணாலாம்.

Pooja room

பூஜை அறையை சுத்தம் செய்வது
முதலில் நாம் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முதல் நாள் நாம் இறைவனுக்கு பூஜை செய்திருப்போம் அல்லவா? அந்த பழைய பூக்கள், பழைய ஊதுவத்தி சாம்பல் ஆகியவற்றை முதலில் சுத்தம் செய்து புதிய தோற்றத்தை உண்டாக்க வேண்டும்.

அபிஷேகம்
கோவிலில் செய்வது போன்ற அபிஷேகம் நம் வீட்டில் தினசரி இறைவனுக்கு செய்வது என்பது சாத்தியமில்லை. ஆகவே நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரை பூவால் எடுத்து இறைவனின் பாதத்தில் இரண்டு சொட்டு சமர்ப்பிக்கலாம். நாம் அப்படி செய்யும் பொழுது “சமர்ப்பயாமி” என்று கூறவேண்டும். உங்கள் வீட்டில் சுவாமி படங்கள் அதிகமாக உள்ளது என்றால் பொதுவாக இரண்டு சொட்டு நீரை மட்டும் பூமியில் விட்டு சமர்ப்பயாமி என்று கூறிவிட்டு அபிஷேகத்தை முடித்து விடலாம். இதற்காக நீங்கள் பயன்படுத்தும் நீரானது தூய்மையாக இருக்கவேண்டும். உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால் உபயோகிக்கலாம்.

Pooja room

பூக்கள்
இறைவனுக்கு பூஜை செய்யும் பொருட்களில் முக்கியமான ஒன்று பூக்கள் தான். அந்ததந்த இறைவனுக்கு என்று சிறப்புகள் கொண்ட பூக்கள் உண்டு. ஆனால் அந்த பூக்களை எல்லாம் நம்மால் தினசரி வாங்க முடியாது. நமக்கு தினசரி என்ன மலர் கிடைக்கின்றதோ அதனை வைத்து இறைவனை பூஜிக்கலாம். ஆனால் அந்த மலர்களை நாம் இறைவனுக்கு வைக்கும் பொழுது அந்த இறைவனின் நாமத்தை நம் வாயால் கூறி வைப்பது சிறந்தது. ஒருவேளை உங்கள் ஊரில் பூக்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம். குறைந்தபட்சமாக அந்த தெய்வத்தின் மந்திரங்களை கூறி நாம் இறைவனை வழிபடலாம். மந்திரம் என்றால் கடினமானது அல்ல. நீங்கள் விநாயகரை வழிபட வேண்டும் என்றால், “ஓம் விநாயகா போற்றி” முருகனை வழிபட வேண்டும் என்றால் “ஓம் முருகா போற்றி” துர்கை அம்மனை வழிபட வேண்டும் என்றால் “துர்க்கை அம்மனே போற்றி” என்று கூறினால் போதும். உங்களுக்கான பலன் கிடைக்கும்.

- Advertisement -

தூபம் காட்டுவது
சாம்பிராணி புகை போடுவது தான் தூபம் என்பார்கள்.  இந்த தூபத்திலிருந்து வரும் புகையை நாம் வீடு முழுவதும் காட்டலாம். உங்கள் வீட்டில் தூபம் போடுவதற்கான வசதி இல்லையென்றால், நல்ல வாசனை உள்ள ஊதுவத்தியை பயன்படுத்தி பூஜை செய்யலாம். பூஜை செய்யும் பொழுது ஊதுவத்தியாக இருந்தாலும் சரி, தூபமாக இருந்தாலும் சரி அதை வலமாகத்தான் சுற்றி பூஜை செய்ய வேண்டும். இப்படி பூஜை செய்யும் பொழுது கண்டிப்பாக குல தெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்.

sambirani

தீபம் காட்டுதல்
நெய் தீபம் ஏற்றி அதனை நம் கைகளால் எடுத்து இறைவனை நோக்கி மூன்று முறை வலப்புறமாக சுற்ற வேண்டும். இப்படி நாம் செய்யும் பொழுது இறைவனை மனதார நினைத்து கொள்ள வேண்டும். தூபம் காட்டிய பிறகு தீபம் கட்டாயமாக காட்டப்பட வேண்டும்.

நைய்வேத்தியம்
நைய்வேதியம் என்பது நாம் சமைத்து தான் வைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உலர் திராட்சை, கற்கண்டு, சர்க்கரை, பழ வகைகள் இவற்றுள் உங்களால் எது முடியுமோ அதனை வாங்கி வைத்து தினசரி இறைவனுக்கு படைத்து பூஜை செய்யலாம். நாம் இறைவனுக்கு நைய்வேதியத்தை படைக்கும் பொழுது, பூவினால் ஒரு சொட்டு தண்ணீரை எடுத்து அந்த நைய்வேதியத்தை மூன்று முறை சுற்றி அதனை இறைவனுக்கு  சமர்ப்பிக்க வேண்டும்.

murugan

ஆராதனை
கற்பூர ஆரத்தியை தான் ஆராதனை என்பார்கள். நாம் செய்யும் பூஜையின் இறுதி கட்டத்தில்தான் கற்பூர ஆராதனை காட்டவேண்டும். சிலர் வீடுகளில் கற்பூர ஆரத்தி காட்டும் பழக்கம் இருக்காது.  கற்பூர ஆரத்தி காட்டும் பழக்கம் இல்லாதவர்கள் நெய்தீப ஆரத்தி காட்டுவதுடன் பூஜையை முடித்துக் கொள்ளலாம். கற்பூர ஆராதனை காட்டும் பழக்கம் உள்ளவர்கள், தூபகலில் கற்பூரத்தை ஏற்றி இறைவனை நோக்கி வலமாக மூன்று முறை சுற்றி ஆராதனையை முடிக்கவேண்டும். பூஜை முடியும் இந்தக் கட்டத்தில் உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை நீங்கள் இறைவனுக்காக சமர்ப்பிக்கலாம். தீப ஆராதனையை நம் கைகளால் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். கற்பூர தீபம் முழுமையாக எறிந்து முடியும் வரை நாம் அதனைப் பூர்த்தி செய்யக் கூடாது. அது தானாகவே தான் குளிர வேண்டும். இந்த பூஜையின் கடைசி கட்டமாக நாம் இறைவனை நினைத்துக் கொண்டு கண்களை மூடி “நான் எனக்குத் தெரிந்த எளிய முறைகளை பின்பற்றி, இறைவனான உனக்கு பூஜை செய்துள்ளேன். இதில் ஏதேனும் சிறு தவறுகள் இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும்.” என்று இறைவனிடம் கேட்டுக் கொள்ளவேண்டும். இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது.

Poojai Vilakku

நாம் இந்த பூஜையைச் செய்வது மட்டுமல்லாமல், நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் தெய்வீக வழிபாட்டை கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் நம் வீட்டு பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் நம் கடமை தான்.

இதையும் படிக்கலாமே:
இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்?

English Overview:
Here we have Veetil poojai seimurai in Tamil or Veetil poojai seivathu eppadi Tamil. Veetil poojai seiyum muraigal, Veetil Sami kumbidum murai in Tamil is here.