சப்பாத்தி பூரியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட இவ்வளவு அருமையான ஒரு காய்கறி மசாலாவை செய்துதான் பாருங்களேன். இதன் சுவைக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று சொல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்

potato
- Advertisement -

பூரி என்று சொன்னாலே வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். எப்பொழுதும் செய்யும் இட்லி, தோசையை விட சப்பாத்தி, பூரி செய்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள். அதிலும் இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அதற்கேற்ற சைடிஷ் செய்தால் போதும். அன்றைய தினம் நீங்கள் எவ்வளவு செய்து கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். பொதுவாக பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட உருளைக்கிழங்கு மசாலா தான் செய்யப்படும். ஆனால் இந்த உருளைக்கிழங்கு மசாலாவில் பட்டாணி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளையும் சேர்த்து சமைக்கும் பொழுது இதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான காய்கறி மசாலாவை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – 2, பொட்டுக்கடலை – 3 ஸ்பூன், பச்சை மிளகாய் – 7, கடுகு – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, பச்சை பட்டாணி – 50 கிராம், கேரட் – 1, பீன்ஸ் – 10, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 4 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைத்து, தோலுரித்து வைக்க வேண்டும். பிறகு வெங்காயம், கேரட், பீன்ஸ் போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும்.

அதேபோல் சிறிய துண்டு இஞ்சியை பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சோம்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் வெட்டி வைத்துள்ள கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும்.

பிறகு மூன்று ஸ்பூன் பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை காய்கறிகளுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அவற்றுடன் கரைத்து வைத்துள்ள இந்த பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து, அனைத்தையும் கிளறிவிட வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டால் சுவையான காய்கறி மசாலா தயாராகிவிடும்.

- Advertisement -