விரும்பிய வேலையை கிடைப்பதற்கு பலரும் அல்லல் படுகின்றனர். படித்தது ஒன்று, வேலையில் சென்று அமர்வது ஒன்று என்று நேர்மாறாக சிலருக்கு அமைந்துவிடும். நாம் எந்த வேலையில் சென்று அமர வேண்டும் என்று படித்தோமோ, அந்த வேலையில் சென்று அமராவிட்டால், மனதை முழுமையாக அந்த வேலையில் ஈடுபடுத்த முடியாமல் போய்விடுகிறது. பிடித்த வேலை கிடைக்க இந்த தாந்திரீக எளிமையான வழிபாட்டை நீங்களும் மேற்கொண்டு பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும். விரும்பிய வேலையில் அமர செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.
மனதை ஒரு முகப்படுத்தி நாம் நினைத்த வேலையில் சென்று எப்படியாவது அமர்ந்து விட வேண்டும் என்று காளி அம்பாளுக்கு மனதார வேண்டிக் கொள்ளுங்கள். காளி அம்மன் என்றாலே பலருக்கும் கொஞ்சம் பயம் இருக்கும். இந்த சக்தி வாய்ந்த அம்மன், சனி பகவானுக்கு நிகரானவர். நியாயமும், நேர்மையும் இவருக்கு ரொம்பவும் முக்கியம். தவறு யார் பக்கம் இருந்தாலும், தவறாமல் தண்டிக்க கூடிய அம்மன் காளியம்மன்.
இந்த அம்மனுக்கு வேண்டிக் கொண்டு வெள்ளை நிற துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கருப்பு நிற அரிசியை ஒரு ஸ்பூன் அளவிற்கு வைத்து மூட்டை போல கட்டிக் கொள்ள வேண்டும். கருப்பு நிற அரிசி எந்த ரகமாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த அரிசி மூட்டையை காளியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும்.
பின்னர் அம்மனுக்கு பிடித்த அடர்நிற குங்குமத்தை கோவிலுக்கு தானம் செய்யுங்கள். குங்குமத்தை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை. வம்ச விருத்திக்கு குங்குமத்தை அம்மன் கோவில்களில் தானம் செய்வது நல்ல பலன் கொடுக்கும். தானம் செய்யும் குங்குமம், நல்ல வாசம் மிகுந்ததாக இருக்க வேண்டும். பின்பு காளி அம்பாளுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து மாலை ஒன்று போடுங்கள். மாலை போட முடியாதவர்கள், பூக்களை வைக்கலாம்.
யாருக்கு வேலை கிடைக்க வேண்டுமோ அவர்களுடைய பெயரில் அர்ச்சனை செய்யுங்கள். அர்ச்சனை செய்து விட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நான் நீண்ட நாள் காத்திருந்த வேலை எனக்கு கிடைக்க வேண்டும்.. எனக்கு மிகவும் பிடித்த இந்த வேலை கிடைத்தால், என் வாழ்க்கையே மாறும்.. இந்த வேலை எனக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும்.. என்று மனம் உருக அம்பாளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு பிரகாரத்தை 108 முறை சுற்றுங்கள்.
இதையும் படிக்கலாமே:
31-10-2024 கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்.
108 முறை அடி பிரதக்ஷணம் செய்ய முடிந்தவர்கள், அதை தாராளமாக செய்யுங்கள், இன்னும் நல்ல பலன் கிடைக்கும். அடி பிரதக்ஷணம் செய்யும் பொழுது காளி அம்மனை மனதார வேண்டி அவருடைய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரம் எதுவும் தெரியாதவர்கள் ”ஓம் காளி அம்மன் போற்றி” என்று சொல்லலாம். பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது வேறு எந்த சிந்தனையும் செய்யக் கூடாது. முழுமையாக கடவுளின் மீது நம்பிக்கை வைத்து, அந்த வேலை கிடைக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு வலம் வர வேண்டும். 108 முறை வலம் வந்த பிறகு அம்பாளை ஒருமுறை வணங்கி விட்டு, அங்குள்ள ஏழை எளியவர்களுக்கு உணவு பொட்டலம் ஒன்றை வாங்கி கொடுத்து தானம் செய்யுங்கள். அவ்வளவுதான், இப்படி நீங்கள் அம்பாளை வழிபட்டால் ஆசைப்பட்ட வேலையில் சென்று நிச்சயம் விரைவாகவே அமர்ந்து விடுவீர்கள்.