சின்ன குழந்தைகள் வெண்டைக்காயை வதக்கல் செய்து கொடுத்தால் நிச்சயமாக சாப்பிட மாட்டார்கள். சாம்பார் வைத்து கொடுத்தாலும் அதை சாப்பிட மாட்டார்கள். ஆனால், கொஞ்சம் மொறு மொறுப்பாக ஸ்னாக்ஸ் போல இப்படி பகோடாவாக சுட்டுக் கொடுத்தால், நிச்சயம் அதை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நிறைய பேருக்கு இந்த வெண்டைக்காய் பக்கோடா செய்தால் மொறுமொறுப்பாக வராது. வெண்டைக்காயை வைத்து மிக மிக சுலபமான முறையில் மொறு மொறுப்பாக சுவையாக பக்கோடா செய்வது எப்படி என்பதை பற்றிய சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக.
செய்முறை
முதலில் 1/4 கிலோ அளவு வெண்டைக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெண்டைக்காயை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி விடுங்கள். கழுவிய பின்பு இந்த வெண்டைக்காய்களை ஒரு காட்டன் துணியில் வைத்து சுத்தமாக தண்ணீர் இல்லாமல் துடைத்து விட வேண்டும்.
அதன் பின்பு வதக்கலுக்கு பொரியலுக்கு நறுக்குவது போல வட்ட வட்டமாக நைசாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய இந்த வெண்டைக்காய்களை எல்லாம் அப்படியே ஒரு தட்டில் பரப்பி வைத்து, சிறிது நேரம் ஃபேன் காற்றில் வைத்து விடுங்கள். வெண்டைக்காயில் மிச்சம் மீதி இருக்கும் பிசுபிசுப்பும் சுத்தமாக நீங்கிவிடும். இதற்கு பிறகு இதை பொரியல் செய்தாலும் சூப்பராக இருக்கும். இப்படி பக்கோடா போட்டாலும் சூப்பராக மொறுமொறுப்பாக வரும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தெரியாதவர்கள் இந்த டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வெண்டைக்காய் பக்கோடாவில் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவையையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு இதில் நாம் வேர்கடலையை சேர்க்கப் போகின்றோம். வருத்த வேர்க்கடலை 1 கைப்பிடி இருந்தால் தோல் உரித்து அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு அகலமான பவுலில் வெட்டி வைத்திருக்கும் வெண்டைக்காய், வேர்க்கடலை, போட்டு அதன் பிறகு கடலை மாவு 4 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், தேவைப்பட்டால் வாசத்திற்கு கரம் மசாலா 1/4 ஸ்பூன், போட்டு இந்த பொருட்களை எல்லாம் முதலில் தண்ணீர் ஊற்றாமல் உங்கள் கையை கொண்டு பிசையுங்கள். (கூடுதலாக கடலை மாவு அரிசி மாவு தேவைப்பட்டாலும் போட்டுக் கொள்ளலாம் தவறு கிடையாது.)
அதன் பிறகு தண்ணீர் தெளித்து இதை பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். (ரொம்பவும் தண்ணீர் ஊற்றி விட வேண்டாம்.) அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள். தயாராக இதற்கும் இந்த பக்கோடா மாவை எடுத்து உதிரி உதிரியாக அப்படியே எண்ணெயில் போடுங்கள். அப்பவும் உங்களுக்கு பகோடா மொத்தமாக எண்ணெயில் விழுந்திருந்தால், ஒரு கரண்டியை வைத்து அதை தனித்தனியாக தள்ளி விடுங்கள். அப்போது பக்கோடா கிரிஸ்பியாக சிவந்து மொரு மொருப்பாக நமக்கு கிடைக்கும். இந்த பக்கோடா மாவின் சடசிடப்பு அனைத்தும் எண்ணெயில் அடங்கியதும் எண்ணெயை வடிகட்டி பக்கோடாவை ஒரு தட்டுக்கு மாட்டிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: சத்தான முளைகட்டிய பச்சைப் பயறு தோசை சுலபமாக செய்வது எப்படி? இது தெரிஞ்சா இனி இட்லி, தோசைக்கு உளுந்தை ஊற வைக்க மாட்டீங்க!
லேசாக சூடு ஆறிய பின்பு இதை சுவைத்து பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் இருக்கும். உங்க வீட்டில் ரெடிமேட் பஜ்ஜி மாவு இருக்கா. வேலை முடிந்தது. வெட்டி வைத்த வெண்டைக்காய் உடன் பஜ்ஜி மாவை போட்டு பிசைந்து அப்படியே எண்ணெயில் விட்டால் சூப்பரான பக்கோடா தயாராக கிடைத்துவிடும். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.