அட புளி சேர்க்காமல் வெண்டைக்காய் குழம்பு இப்படி கூட வைக்கலாமா? வச்சு தான் பாருங்க! ஒரு குண்டான் சோறு இருந்தா கூட, ஒரு பருக்கை மீதமாவாது.

vendaikkai
- Advertisement -

பொதுவாகவே வெண்டைக்காய் என்றால், அதை பொரியல் செய்து சாப்பிடுவோம். வதக்கல் செய்து சாப்பிடுவோம். அப்படி இல்லை என்றால், புளிக்குழம்பு சாம்பார் இப்படித்தான் செய்வோம். ஆனால், புளி சேர்க்காமல் இப்படியும் வெண்டைக்காய் குழம்பு வைக்கலாம். ஒரு புது விதமான வெண்டைக்காய் குழம்பு ரெசிபி இது. சுடச்சுட சாதத்திற்கு இந்த ஒரு குழம்பு இருந்தால் போதும். அந்த சாதத்தில் குழம்பை ஊற்றி ஊற்றி பிசைந்து பிசைந்து அப்படியே சாப்பிட்டு விடலாம். அந்த அளவுக்கு ருசி நிறைந்த வெண்டைக்காய் குழம்பு ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இதற்கு முதலில் 150 லிருந்து 200 கிராம் அளவு வெண்டைக்காய்களை எடுத்து நன்றாக கழுவி, துடைத்து சாம்பாருக்கு நறுக்குவது போல நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்தபடியாக 1/2 மூடி தேங்காயை துருவி தேங்காய் பால் எடுக்க வேண்டும். முதலாவதாக திக்காக எடுத்த தேங்காய் பால் 1 கப், இரண்டாவதாக எடுத்த தேங்காய் பால் 1 கப். இரண்டு கப் தேங்காய் பாலும் தனித்தனியாக அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய்களை போட்டு, மேலே சிறிதளவு உப்பு தூவி, இரண்டு நிமிடம் நன்றாக வதக்கி எடுக்கவும். அந்த கொழகொழப்பு போகும் வரை எண்ணெயில் வதக்கி வெண்டைக்காயை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், பூண்டு துருவல் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு நன்றாக வதக்குங்கள். பிறகு நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/2 அரை கைப்பிடி, அளவு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கி வந்தவுடன், நறுக்கிய பெரிய தக்காளி பழம் – 1, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் போட்டு வதக்குங்கள்.

- Advertisement -

தக்காளிப் பழம் வெந்து வதங்கி வந்ததும் மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், போட்டு 30 செகண்ட் வரை வதக்கி தேவையான அளவு – உப்பு, போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த மசாலா பொருட்களை எல்லாம் வேக வைத்து விடுங்கள். (மிளகாய் தூள், வர மல்லி தூள், சீரகத் தூள் பதிலாக, உங்கள் வீட்டில் குழம்பு மிளகாய் தூள் இருந்தாலும் அதை காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்.)

அடுத்தபடியாக நறுக்கிய வெண்டைக்காய்களை இதில் போட்டு, இரண்டாவதாக எடுத்த, கொஞ்சம் தண்ணீராக இருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க வையுங்கள். 5 நிமிடத்தில் வெண்டைக்காய் வெந்ததும், முதலாவதாக எடுத்து வைத்திருக்கும் திக்கான தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி வந்த உடனேயே அடுப்பை அணைத்து விட வேண்டும். இரண்டாவது தேங்காய் பால் ஊற்றி குழம்பு நிறைய கொதிக்க கூடாது.

இதையும் படிக்கலாமே: பீச் ஸ்டைல் மாங்கா மசாலா ரெசிபி இனி வீட்டிலேயும் சுலபமாக செய்யலாமே! இந்த மாங்காய் சீசனில் அசத்தலான மாங்காய் மசாலா எப்படி செய்வது?

இறுதியாக இந்த குழம்பு மணப்பதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் வெங்காய வடகம் இருந்தால், தாளித்துக் கொட்டி விடலாம். இல்லை என்றால் கடுகு, கருவாப்பிலை, வரமிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு, நன்றாக சிவக்க விட்டு இந்த தாளிப்பை குழம்பில் ஊற்றி கலந்து சுடச்சுட பரிமாறி பாருங்கள். இதனுடைய சுவை வேற லெவலில் இருக்கும்.

- Advertisement -