அசத்தலான வெண்டைக்காய் புளிக்குழம்பு ஹோட்டல் ஸ்டைலில் எப்படி சுவையாக செய்வது? இது தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!

vendaikkai-puli-kulambu1_tamil
- Advertisement -

ஹோட்டல் சுவையில் புளிக்குழம்பு அல்லது கல்யாண வீடுகளில் கொடுக்கும் புளிக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான புளிக் குழம்புக்கு அடிமையாகி போனவர்களும் உண்டு. அந்த வகையில் இப்படிப்பட்ட புளி குழம்பு எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – 200 கிராம், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பூண்டு – பத்து பல், சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தக்காளி – 2, மிளகாய் தூள் – கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், புளி தண்ணீர் – ஒரு கப், வெல்லம் – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

வெண்டைக்காய் புளி குழம்பு செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் சின்ன வெங்காயத்தையும், பூண்டையும் தோலுரித்து வையுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் நன்கு சுத்தம் செய்து குழம்பில் போடக்கூடிய வகையில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிய வெண்டைக்காய்களை அதில் போட்டு பாதி அளவிற்கு நன்கு பொரித்து எடுக்க வேண்டும். முழுவதுமாக பொரிக்கக்கூடாது, பொரிக்கும் சமயத்தில் கொஞ்சம் உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வெண்டைக்காய்களை தனியாக எடுத்து வைத்து விடுங்கள். மீதமிருக்கும் அதே எண்ணெயில் சிறிதளவு கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

- Advertisement -

பின்னர் வெந்தயம், கருவேப்பிலை, பூண்டு பற்கள், தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் ஆகியவற்றை வரிசையாக சேர்த்து ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி விடுங்கள். இவைகள் நன்கு வதங்கிய பின்பு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு தக்காளி பழங்களை சுத்தம் செய்து வெட்டி போட்டு நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து வாருங்கள். அரைத்து எடுத்த இந்த தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

ஒரு ரெண்டு நிமிடம் நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போக லேசாக வதக்கி விடுங்கள். இவை நன்கு சுருள வதங்கியதும், கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்ததும் தேவையான அளவிற்கு தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மீந்து போன சப்பாத்தியில் சுவையான லட்டு இப்படி கூட தயாரிக்கலாமா? இது தெரிஞ்சா இனிமே சப்பாத்தி வேஸ்ட்டே ஆகாதே!

ஒரு 7 லிருந்து 8 நிமிடம் நன்கு மூடி போட்டு கொதிக்க விடுங்கள். கடைசியாக குழம்பு கொதித்து கெட்டியாக எண்ணெய் பிரிந்து வரும் பொழுது, ஒரு ஸ்பூன் வெல்லத்தை போட்டு கரையவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான், சுவையான ஹோட்டல் ஸ்டைலில் அற்புதமான வெண்டைக்காய் புளி குழம்பு ரெசிபி தயார்! நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -