சிவராத்திரி நாளில் பலரும் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ விரதம் இருக்காமல் வழிபாட்டை மட்டும் செய்வார்கள். ஒரு சிலர் இரவு நேரத்தில் கண்விழித்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ கண் விழிக்க இயலாது என்னும் பட்சத்தில் வழிபாட்டை மட்டும் செய்துவிட்டு உறங்குவார்கள். வீட்டிலேயே கண் விழித்து இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய பூஜைகளில் கலந்து கொண்டு கண் விழிப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் பலவிதமான முறையில் சிவராத்திரியை சிறப்பாக கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் நாம் ஏற்றக்கூடிய தீபம் மற்றும் கொடுக்கக் கூடிய பொருட்களால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சிவராத்திரி தீப வழிபாடு
இரவு முழுவதும் ஆலயத்திலிருந்து கண்விழிக்க முடியாது என்று நினைப்பவர்கள் கூட முதல் கால பூஜை சமயத்தில் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு வருவார்கள். அப்பொழுது தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கி தருவார்கள். அதே போல் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்வார்கள். ஒவ்வொரு வேண்டுதலுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீபத்தை ஏற்றி நாம் வழிபாடு செய்து அந்த வேண்டுதலுக்குரிய பலனை பெற முடியும். அதேபோல் நாம் வாங்கித் தரக்கூடிய பொருட்களை வைத்தும் நமக்கு பலன்கள் கிடைக்கும். அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சிவராத்திரி அன்று சிவபெருமான் ஆலயத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். நெய் மற்றும் நல்லெண்ணெய் சுத்தமான சமையலுக்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். நமக்கு அதிக அளவில் கடன் பிரச்சினை இருக்கிறது அந்த கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றால் 9 விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். நம்முடைய கர்ம வினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் எட்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். எதிரிகளால் ஏற்படக்கூடிய தொல்லைகள் முற்றிலும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆறு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு இருக்கிறது, எவ்வளவு மருத்துவம் எடுத்துக்கொண்டும் எந்தவித பலனும் இல்லை என்பவர்கள் ஏழு அல்லது எட்டு எண்ணிக்கையில் தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
எப்பொழுதும் வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் நன்மைகள் நடந்தால் பல விஷயங்கள் தோல்வி அடைகிறது என்று புலம்புபவர்களும், ஏற்ற இறக்கத்துடன் வாழ்க்கை இருக்கிறது என்று நினைப்பவர்களும், நிலையான நல்ல முன்னேற்றகரமான வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புபவர்களும் சுத்தமான சந்தன பொடியை வாங்கி சிவபெருமானுக்கு திலகம் வைப்பதற்காக தரவேண்டும். அபிஷேகத்திற்கு தருவதை விட இப்படி திலகம் வைப்பதற்கு தருவதன் மூலம் அதிக அளவில் பலன் கிடைக்கும். முடிந்த அளவிற்கு சுத்தமான சந்தனமாக பார்த்து வாங்கி தர வேண்டும் அல்லது நாமே சந்தன கட்டையை வாங்கி பன்னீர் ஊற்றி இளைத்து அந்த சந்தன விழுதை கொண்டு போய் கொடுக்கலாம். அது இன்னும் அதிக பலனை தரும்.
அதே போல் சிவபெருமானுக்கு உகந்ததாக திகழக்கூடியது வில்வம். இந்த வில்வத்தோடு சேர்த்து மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய வாசனை மிகுந்த மலரையும் சேர்த்து வாங்கி சிவபெருமானுக்கு தருவதன் மூலம் சிவன் மற்றும் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும். அதேபோல் அன்றைய தினத்தில் நெய்வேத்தியமாக சுவாமிக்கு சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு தருவதன் மூலம் தங்க நகைகள் சேருவதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் தீரும். உறவுகளுக்கு இடையே இருக்கக்கூடிய மனக்கசப்புகளும் விலகும்.
அடுத்ததாக தூபம் காட்டுவதற்கு சந்தன ஊதுபக்திகளை நாம் வாங்கித் தருவதன் மூலமும் சாம்பிராணி தூபம் போட்டுத் தருவது மூலமும் சனிபகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும். மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி வருகிறது என்பதால் அந்த சனிப்பெயர்ச்சியினால் பலரும் பலவிதமான சங்கடங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் சிவராத்திரி அன்று சந்தன ஊதுபத்தி மற்றும் தூபத்தை தருவதன் மூலம் சனி பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும்.
இதையும் படிக்கலாமே:செல்வ கடாட்சம் ஏற்பட சிவ அர்ச்சனை
அதிக அளவில் சிரமப்படாமல் வறுமை நிலையில் இருப்பவர்கள் கூட மேல் சொன்ன பொருட்களை தங்களால் இயன்ற அளவு வாங்கி சிவபெருமானின் ஆலயத்தில் சிவபெருமானுக்கு தருவதன் மூலமும் தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலமும் அவர்களுடைய வாழ்வில் எண்ணிலடங்காத நன்மைகள் நடைபெறும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.