நாம் வெளியூர் பயணங்கள் போனாலோ அல்லது நம் வீட்டில் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், நமக்கு போகும் இடம் எல்லாம் நம்முடைய உணவு வகைகள் கிடைப்பதில்லை. ஆகையால் நாம் சில உணவுப் பொருள்களை வீட்டிலிருந்து செய்து கொண்டு செல்வோம் அல்லது கொடுத்து விடுவோம். இப்படி செய்யும் வகைகளில் முதலிடத்தில் ஊறுகாய் போன்றவைகள் இருக்கும் அடுத்து புளிக்குழம்பு, பருப்பு பொடி, இதுபோன்ற வகையில் இருக்கும். தொக்கு வகைகளில் தக்காளி தொக்கு, பூண்டு தொக்கு, கருவேப்பிலை தொக்கு, இது போன்று தான் செய்து இருப்பீர்கள். ஆனால் வெங்காயத் தொக்கு செய்திருக்க மாட்டீர்கள். ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத அளவிற்கு வித்தியாசமான முறையில் இந்த வெங்காயத் தொக்கை இனி நீங்கள் செய்து பாருங்கள் திரும்பத் திரும்ப செய்து தர சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். பிறகென்ன உங்கள் வெளியூர் பேக்கிங் லிஸ்டில் இந்த வெங்காய தொக்கு தான் முதலில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் 10 அல்லது 15 அளவு எடுத்து தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயமும் போடலாம் இருந்தாலும், சின்ன வெங்காயம் சேர்க்கும் போது சுவை சற்று கூடுதலாக கிடைக்கும்.
இந்த தொக்கிற்கு தேவையான பொடி அரைக்க:
கடுகு – ஒரு ஸ்பூன், தனியா – ஒரு ஸ்பூன், வெந்தயம் – ஒரு ஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன் (கட்டி பெருங்காயமாக இருந்தால் இதனுடன் சேர்த்து வறுக்கலாம் இல்லை பவுடராக தான் இருக்கிறது என்றால் மூன்றையும் வறுத்த பின் பெருங்காயத்தூளை சேர்த்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்)
இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் சற்று கூடுதலாக இருந்தால் நல்லது. இது போன்ற தொக்குகளுக்கு நல்லெண்ணெய் தான் நல்ல ஒரு மணத்தையும், சுவையையும் கொடுக்கும், நீண்ட நாள் கெட்டுப் போகாமலும் பாதுகாக்கும்.
கடுகு போட்டு தாளித்து பின் இந்த நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்க வேண்டும். வெங்காயம் சீக்கிரம் வதங்க சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக சுருண்டு வந்தவுடன், சிறிது கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் அளவுக்கு தனி மிளகாய் தூள் (காரம் சற்று அதிகமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் சற்று கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்) இவை அனைத்தும் எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்.
இது வதக்கி வந்தவுடன், இத்துடன் ஒரு எலுமிச்சை பழ அளவு புளி எடுத்து நன்றாக கரைத்து ஊற்றி மூடி வைத்து விடுங்கள். மூன்றும் சேர்ந்து நன்றாக நிறம் மாறி வதங்கி சுருண்டு வந்தவுடன், அரைத்து வைத்துள்ள பவுடரை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே சிம்மில் வைத்து விடுங்கள். கடைசியாக இறக்கி வைக்கும் போது சிறிது வெல்லம் தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான வெங்காய தொக்கு ரெடி. இது இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு நல்ல ஓரு பக்காவான சைடுடிஸ். சாதத்திற்கும் இது நான்றாக தான் இருக்கும்.