பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்காக பல வழிகளில் முயற்சி செய்தாலும், முயற்சி செய்வதோடு ஒரு சிலர் அந்தப் பிரச்சினைகள் விரைவில் தீர வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் மேற்கொள்வார்கள். அப்படி மேற்கொள்பவர்களில் சிலருக்கு மட்டுமே அந்த பரிகாரங்களும் வழிபாடும் வெற்றியைத் தரும். மீதம் இருப்பவர்களுக்கு அது வெற்றியை தராது. அதற்கு காரணம் அவர்களின் கர்ம வினைகள் குறையாமல் இருப்பதே. அப்படி அவர்களுடைய கர்ம வினைகள் தீர வேண்டும் என்றால் அமாவாசை தினத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அமாவாசை தினத்தன்று செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் பல மடங்கு பலன்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அமாவாசை தினத்தன்று வெண்கடுகை வைத்து நாம் செய்யக்கூடிய எளிமையான பரிகாரம் நம்முடைய கர்ம வினைகளை தீர்ப்பதோடு நமக்கு இருக்கக்கூடிய தீய சக்திகளையும் நீக்க உதவும். அப்படிப்பட்ட வெண்கடுகு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக அமாவாசை என்பது முன்னோர்களின் வழிபாட்டிற்கு சிறப்புக்குரியது. அதேபோல் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களையும், தீய சக்திகளையும் விளக்குவதற்கு அமாவாசை தினம் என்பது முக்கியமான தினமாக கருதப்படுகிறது. அதனால் தான் அன்றைய தினத்தில் தொழில் செய்யும் இடங்களிலும், வீட்டிலும் தேங்காயை சுற்றி உடைப்பது, பூசணிக்காய் உடைப்பது, எலுமிச்சம் பழத்தை உடைப்பது என்று பல முறைகளில் தங்களிடம் இருக்கக்கூடிய தீய சக்திகளை விரட்டி அடிப்பதற்கு பரிகாரங்கள் செய்வார்கள். அந்த முறையில் வெண்கடுகை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு எதிர்மறை ஆற்றலால் பாதிப்புகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். மேலும் கர்ம வினைகளும் நீங்கும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது வெண்கடுகு மட்டுமே.
வெண்கடுகு என்பது காலபைரவரின் அம்சமாக திகழக்கூடியது. வெண்கடுகு யார் ஒருவர் வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்களுக்கு வேலையே இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் வெண்கடுகை வைத்து நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு பரிகாரகங்களும் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்கக்கூடியதாகவே திகழ்கிறது.
இந்த பரிகாரத்தை நாம் அமாவாசை தினத்தன்று மாலை 6:00 மணிக்கு மேல் செய்ய வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் வரிசையாக கிழக்கு பார்த்தவாறு நிற்க வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிவப்பு நிற துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு வெண்கடுகை போட்டு மூட்டையாக கட்டிவிட வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய மூத்த பெண்மணி ஒவ்வொருவருடைய தலையையும் தனித்தனியாக இந்த மூட்டையை வைத்து சுற்ற வேண்டும்.
வீட்டில் மூத்த பெண்மணி இல்லாத பட்சத்தில் குடும்ப தலைவிகள் இந்த பரிகாரத்தை செய்யலாம். தலையை வலது புறமாக மூன்று முறையும், இடது புறமாக மூன்று முறையும், பிறகு மேலிருந்து கீழாக மூன்று முறை என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒன்பது முறை சுற்ற வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாகவே வீட்டு வாசலில் ஒரு அகல் விளக்கு அல்லது கொட்டாங்குச்சியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கை கால்களை கழுவுவதற்கு தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட வேண்டும். வீட்டிற்குள் இருக்கும் நபர்கள் உடனே தங்களுடைய முகம் கை கால்களை கழுவிக்கொள்ள வேண்டும். இப்பொழுது அந்த மூட்டையை அகல்விளக்கிலோ அல்லது கொட்டாங்குச்சியிலோ வைத்து அதை எறிய விட வேண்டும். அது முழுமையாக எரிந்து முடிந்த பிறகு அந்த சாம்பலை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு வீட்டிற்குள் வருவதற்கு முன்பாக முகம் கை கால்களை கழுவிய பிறகு உள்ளே வரவேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளும் நீங்கும். முன்னோர்களின் சாபமும் நீங்கும். நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே: தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் தீர
மிகவும் எளிமையான இந்த வெண்கடுகு பரிகாரத்தை ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் செய்து நம்மை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளில் இருந்தும் விலகி நிம்மதியுடன் வாழலாம்.