காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க வீட்டில் காய்கறி இல்லையா? கவலை வேண்டாம் வெங்காயம் மட்டும் இருந்தாலே போதும், இந்த சுவையான சாதத்தை செய்து விடலாம்

onion-rice
- Advertisement -

காலையில் அவசர அவசரமாக எழுந்து, குழந்தைகளை எழுப்பி, கிளப்பிவிட்டு, அவர்களுக்கு தேவையான உணவை சமைத்து லஞ்ச் பாக்ஸில் வைத்து, அவர்களை பள்ளிக்கு அனுப்புவது என்பது ஒரு போர்க்களம் போன்று தான் இருக்கும். சமையல் வேலையையும் கவனித்துக்கொண்டு, அதே சமயம் குழந்தைகளையும் கிளப்ப வேண்டும். இவ்வாறு மிகவும் அவசரமான நேரத்தில் குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுக்க வீட்டில் காய்கறி இல்லாவிட்டால் போதும், மிகவும் இக்கட்டான சூழ்நிலையாக மாறிவிடும். இந்த நேரத்தில் சற்றும் யோசிக்காமல் இரண்டு வெங்காயத்தை அறிந்து இப்படி சமைத்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவார்கள். இவ்வாறு வெங்காயத்தை மட்டும் வைத்து செய்யும் சுவையான வெங்காய சாதத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிஜதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 4, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, எண்ணெய் – 5 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் எப்பொழுதும் போல தேவையான அளவு சாதத்தை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நான்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பிறகு கடாயில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயத்தை மிகவும் குழைவாக வதக்காமல், சற்று வாயில் கடிபடும் அளவிற்கு வதங்கினால் மட்டும் போதும்.

பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இந்த கலவையுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வெங்காய சாதம் தயாராகிவிட்டது.

- Advertisement -