நாம் அனுதினமும் சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவி கவிழ்த்து வைப்பது வழக்கமாக இருக்கிறது. இப்படி பாத்திரத்தை கழுவும் பொழுது, சரியாக கழுவக் கூடாதா? மகாபாரதத்தில் திரௌபதி செய்த இந்த தவறின் மூலம் சாஸ்திரங்கள் நமக்கு கற்பிப்பது என்ன? என்பது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ள போகிறோம்.
மகாபாரதத்தில் விதி வசத்தால் வனவாசத்தை 13 ஆண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டி இருந்தது பாண்டவர்களும், திரௌபதியும்! அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு உணவு பஞ்சம் வரவே, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, திரௌபதிக்கு அதிசய பாத்திரம் ஒன்றை கொடுத்தார். அந்த பாத்திரம் தான் “அட்சய பாத்திரம்”. அள்ள அள்ள குறையாத அன்னத்தை பரிசளிக்கும் அபூர்வ பாத்திரம். அட்சய பாத்திரத்தை ஒரு முறை கழுவி கவிழ்த்து விட்டால், மீண்டும் மறுநாள் வரை அது உணவு தராது என்பது அதன் விதிமுறையாகும்.
ஒரு நாள் திரௌபதி அந்த அட்சய பாத்திரத்தை கழுவி கவிழ்த்து வைத்த பின்பு, துர்வாச முனிவர் கடும் பசியில் உணவு கேட்டு திரௌபதியிடம் வந்தார். அப்போது அட்சய பாத்திரத்தை கழுவி கவிழ்த்தி விட்டாயிற்று! எப்படி முனிவருக்கு திரௌபதி உணவு பரிமாறுவாள்? அப்போது அவளுக்கு உதவி செய்ய தோன்றிய கிருஷ்ணர் கவலைப்படாதே நீ அந்த பாத்திரத்தை ஒருமுறை நன்றாக பார் திரௌபதி என்று கூறுவார். திரௌபதி அந்த பாத்திரத்தை எடுத்துப் பார்த்தாள். அதில் ஒரு கீரை பருக்கை ஒட்டிக் கொண்டிருக்கும்.
அட்சய பாத்திரத்தை முழுமையாக சரியாக கழுவி கவிழ்த்தால் தான் அது உணவு தராது ஆனால் கீரை பருக்கை ஒட்டி இருந்ததால் மீண்டும் அதிலிருந்து உணவு எடுத்து துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து திரௌபதியால் தப்பிக்க முடிந்தது. மகாபாரதத்தின் இந்த நிகழ்வால் ஒரு பெண் வீட்டில் சமைத்து முடித்த பாத்திரங்களை சரியாக கழுவ கூடாது என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர். கலியுகத்திலும் பெரும்பாலான பெண்கள் சரியாக பாத்திரங்களை கழுவி கவிழ்ப்பதில்லை.
உண்மையில் சாஸ்திரங்கள் மகாபாரத கதையின் மூலமாக சொல்ல வருவது யாதெனில்.. உணவு வேண்டி வருபவர்களுக்கு எந்த காரணம் கொண்டும் இல்லை என்று சொல்லி பசியுடன் வெளியில் அனுப்பக்கூடாது. எல்லா காலங்களிலும் பசித்தோர்க்கு இல்லை என்று சொல்வது மகா பாவமாகும் என்பதை தான் சாஸ்திரங்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. எனவே சமைத்து முடித்த பின்பும், ஒரு கைப்பிடி அளவிற்காவது சாதத்தை தனியாக எடுத்து வைக்க வேண்டும். சுத்தமாக ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல், எல்லா பாத்திரங்களையும் கழுவி வைத்து விடக்கூடாது என்பது தான் இதன் தாத்பரியம் ஆகும்.
இதையும் படிக்கலாமே:
பால் குல்பி ரெசிபி
பகலானாலும், இரவானாலும் ஒரு கைப்பிடி சாதமாவது வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இரவு எல்லா பாத்திரங்களையும் கழுவி வைக்கும் முன்னர், ஒரு கைப்பிடி அளவிற்கு சாதத்தை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி வையுங்கள். இதன் மூலம் கிருஷ்ண பரமாத்மாவும் அன்னபூரணியும் உங்களுக்கு வறுமை இல்லாத செல்வ செழிப்பான நிலையை கொடுப்பார்கள் என்பது நம்பிக்கை. நீங்கள் யாருக்கும் எந்த உதவியும் செய்யாதவராக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் பசி என்று உங்கள் முன்பு கேட்டு வந்தவருக்கு இல்லை என்று மட்டும் சொல்லி ஏழேழு பிறவிக்கும் மகா பாவத்தை சேர்த்து வைத்துக் கொள்ளாதீர்கள். இது உங்களை மட்டும் அல்லாமல், உங்களுடைய சந்ததியினரையும் தொடரும் பாவமாகும். உங்களிடம் இல்லை என்றாலும், உடனே ஏதாவது ஒரு உணவினை சமைத்தாவது கொடுத்து விடுங்கள், புண்ணியங்கள் பெருகும்.