வீட்டில் எல்லா வேலைகளையும் ஓரளவிற்கு குறைத்துக் கொண்டாலும் கூட இந்த பாத்திரம் தேய்க்கும் வேலை மட்டும் குறையவே குறையாது. இதில் மற்ற வேலைகளை கூட இன்று இல்லை என்றால் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடலாம். ஆனால் பாத்திரத்தை மட்டும் தினமும் தேய்த்தே ஆக வேண்டும். தினமும் செய்யும் இந்த வேலையை எளிமையாக செய்ய ஒரு சூப்பரான வழிமுறையை இந்த வீட்டு குறிப்பு குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
இனி நீங்கள் வீட்டில் அழுக்கு படிந்த பாத்திரங்களை மாங்குமாங்கு என்று தேய்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த ஒரு எளிமையான லிக்விட் தயாரித்து வைத்துக் கொண்டால் போதும். எவ்வளவு பாத்திரங்கள் இருந்தாலும் அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்காமல் சிம்பிளாக பளிச்சென்று மாற்றி விட முடியும். இந்த லிக்விட் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
பாத்திரம் தேய்க்கும் லிக்விட் தயாரிக்கும் முறை
இந்த லிக்விட் தயார் செய்ய பத்து ரூபாய் துணி பவுடர் இரண்டு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு எந்த பிராண்ட் பவுடர் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். அடுத்து ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து ஒரு புறம் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இன்னொரு புறம் எடுத்து வைத்திருக்கும் ஒரு எலுமிச்சை பழத்தை நெருப்பின் அனலில் லேசாக காட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு குச்சி, கம்பி போன்று எதையாவது பயன்படுத்திக் சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு எலுமிச்சை பழத்தின் சாறை மட்டும் தனியாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு பவுலில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் இரண்டு பேக் சோப்புத் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்தோடு ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரே ஸ்பூன் மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு லிட்டர் தண்ணீரை இதில் ஊற்றி ஒரு முறை கலந்து அப்படியே வைத்து விடுங்கள்.
இந்த தண்ணீர் நன்றாக ஆறிய பிறகு மீண்டும் நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதற்கு துளை போட்ட பாட்டில் காற்று புகாதபடி இருக்க வேண்டியது அவசியம். இந்த பாட்டிலில் லிக்விடை ஊற்றி வெளியே வைத்தால் ஒரு மாதம் ஆனால் கூட கெட்டுப் போகாது. இதில் லெமனை சூடு படுத்தி சேர்த்து இருப்பதால் பழம் அழுகல் வாடை வராது. அது மட்டும் இன்றி எலுமிச்சை பழத்தின் வாடை இன்னும் சற்று தூக்கலாகவே தெரியும்.
இதில் சேர்த்து இருக்கும் எலுமிச்சை பழம், கல்லுப்பு, மஞ்சள், போன்றவை எல்லாமே அழுக்குகளை நீக்கி இயற்கையான முறையில் சுத்தமாக வைத்திருக்கக் கூடிய பொருட்கள் தான். இதை வைத்து நாம் பாத்திரங்களை தேய்க்கும் போது கறைகள் எல்லாம் நீங்குவதுடன் பாத்திரங்களில் எந்த வித வாடையும் வராது. இந்த லிக்விட் தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இது போல செய்து வைத்துக் கொள்ளுங்கள். செலவும் மிச்சம் நேரமும் மிச்சம் அதை நேரத்தில் பாத்திரங்களும் பளிச்சென்று இருக்கும்