வீட்டில் மிளகு தீபம் ஏற்றுவது முறையா? வீட்டில் ஏற்றக்கூடாத தீபங்கள் என்னென்ன? தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!

el-milagu-lemon-vilakku-deepam
- Advertisement -

பொதுவாக காமாட்சி அம்மன் விளக்கு அல்லது குத்து விளக்கு, குபேர விளக்கு, அகல் விளக்கு போன்றவற்றை வீட்டில் ஏற்றுவது மரபு! மற்ற பரிகார தீபங்கள் எதுவாயினும் அதை கோவிலில் வைத்து, அந்தந்த கடவுளுக்கு ஏற்றி வழிபடுவது என்பது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் சாஸ்திரமாகும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் பரிகார தீபங்களை வீட்டில் ஏற்றுவது சரியா? என்கிற கேள்விக்கான பதிலைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பரிகார தீபங்களை கண்டிப்பாக அந்தந்த தெய்வங்களுக்கு உரிய ஆலயங்களில் சென்று ஏற்றுவது தான் முறையாகும். அதை வீட்டில் வைத்து ஏற்றுவது என்பது சரி அல்ல! ஆனால் வீட்டிலும் ஏற்றக் கூடிய தீபங்கள் நிறையவே உண்டு. அத்தகைய தீபஙகளில் மிக முக்கியமான தீபங்கள் வெற்றிலை தீபம், உப்பு தீபம், ஜலதீபம், ஆத்ம தீபம், மிளகு தீபம், குபேரனுக்கு ஏற்றப்படும் நெல்லிக்காய் தீபம் போன்றவையும் அடங்கும்.

- Advertisement -

வெள்ளிக் கிழமையில் சகல ஐஸ்வரியங்களும் பெருக உப்பு தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். காரிய வெற்றிக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடலாம். அது போல ஜல தீபம் ஏற்றினால் குடும்பத்தில் இருக்கும் உஷ்ணம் போன்ற பிரச்சனைகள் தணிந்து குளிர்ச்சியுறும் என்கிற நம்பிக்கை உண்டு. இது போல ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் வீட்டில் ஏற்றுவதால் கிடைப்பது உண்டு.

வீட்டில் கட்டாயம் தெரியாமல் கூட ஏற்றக் கூடாத விளக்கு என்றால் அது பஞ்ச தீப விளக்கு, இலுப்பை எண்ணெய் விளக்கு, எள் தீபம், எலுமிச்சை தீபம், தேங்காய் தீபம் போன்றவற்றை ஏற்றக் கூடாது. இதை கோவில்களில் சென்று தான் நீங்கள் முறையாக ஏற்றி வழிபட வேண்டும். எள் தீபம் என்பது சனீஸ்வரருக்கு சனீஸ்வர தோஷம் போக ஏற்றப்படும் முக்கிய விளக்காகும். இதை வீட்டில் வைத்து ஏற்றினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்கிறது ஜோதிடம் எனவே எள் விளக்கை வீட்டில் வைத்து ஏற்றக் கூடாது.

- Advertisement -

மிளகு தீபம் பைரவருக்கு ஏற்றி வழிபடக் கூடிய அற்புதமான ஒரு தீபம் ஆகும். இதை வீட்டில் வைத்து தாராளமாக ஏற்றி வழிபடலாம். கடன் ஒழிய பைரவரை நினைத்து வீட்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம். அதிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி திதிகளில் வீட்டில் மிளகு தீபம் ஏற்றி வைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீரும் என்கிற நம்பிக்கையும் உண்டு. தோஷங்கள் நீங்கி, கடன் ஒழிய ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசியை பரப்பி 2 அகல் தீபங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் எண்ணெய் விட்டு ஒரு வெள்ளை துணி அல்லது மஞ்சள் துணியில் சிறு மூட்டையாக கொஞ்சம் மிளகுகளை போட்டு கட்டி எண்ணெயில் மூழ்க வைத்து தீபம் ஏற்ற வேண்டும். தீபம் எரிந்து முடியும் வரை பிரார்த்தனைகளை மேற்கொள்ளுங்கள். இவ்வாறு செய்ய எத்தகைய கடனும் காணாமல் போகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. துர்க்கை அம்மனுக்கு ஏற்றப்படும் எலுமிச்சை தீபத்தை எக்காரணம் கொண்டும் வீட்டில் ஏற்றக்கூடாது. உக்கிர தெய்வங்களுக்கு ஏற்றப்படும் பரிகார தீபங்கள் கண்டிப்பாக வீட்டில் ஏற்றவே கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -