விளக்கை குளிர வைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க. வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைய இதுவும் ஒரு காரணம்தான்.

vilakku-deepam
- Advertisement -

தினமும் பூஜை அறையில் தீபம் ஏற்றும் போது எந்த அளவிற்கு பயபக்தியோடு ஏற்றி வைக்கின்றோமோ, அதே போல தான் அந்த விளக்கை மலை ஏறும்போதும் பயபக்தியோடு குளிர வைக்க வேண்டும். சிலபேர் ஏற்றும் போது ரொம்பவும் மந்திரங்களைச் சொல்லி விழுந்து விழுந்து சாமி கும்பிட்டு ஏற்றுவார்கள். ஆனால் விளக்கை குளிர வைக்கும் போது அப்படியே வந்து ஒரு பூவை எடுத்து நெருப்பின் மீது வைத்து விளக்கை சாதாரணமாக குளிர வைத்து விட்டு சென்று விடுவார்கள். இது மிகவும் தவறான ஒரு விஷயம். தீபத்தை குளிர வைக்கும் போது அதை முறைப்படி எப்படி குளிர வைக்க வேண்டும் என்பதைப் பற்றிய சின்ன ஆன்மீக ரீதியான குறிப்பை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

தீபத்தை குளிர வைப்பதற்கு முன்பாக மகாலட்சுமியை மனதார நினைத்து கொள்ள வேண்டும். இன்று எங்களுடைய வீட்டில் தீபம், சுடர் விட்டு எரிந்தது போல இனி வரக்கூடிய நாட்களிலும் தினம் தினம் தீபம் ஏற்றப்பட்டு வெளிச்சம் பிரகாசமாக மகாலட்சுமி ஜோதி வடிவில் எறிய வேண்டும், என்ற வேண்டுகோளோடு தீபத்தை நமஸ்காரம் செய்துவிட்டு அதன் பின்பு குளிர வைக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டில் உள்ள இருளை நீக்கக்கூடிய தீப சுடரல்லவா அது. ஆகவே அந்த தீபம் குளிர்ந்த பிறகும், பிரகாசமாக மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய இந்த குறிப்பை எல்லோரும் பின்பற்ற வேண்டும். அடுத்தபடியாக தீபத்தை குளிர வைப்பதற்கு வெள்ளி குச்சு பயன்படுத்துவது சரியான வழி என்று சொல்லப்பட்டுள்ளது. வெள்ளி குச்சில் திரியை உள்பக்கம் இழுத்து விட்டால், எண்ணெயில் தீபம் குளிர்ந்து விடும். ஆனால் எல்லோராலும் இந்த வெள்ளி குச்சை வாங்கி பூஜையறையில் வைக்க முடியாது. அப்படி இருக்கும்போது இனிப்பு சுவை நிறைந்த கற்கண்டை வைத்து இந்த தீபத்தை குளிர வைக்கலாம். ஒரு சிறிய டைமண்ட் கற்கண்டு இருந்தால் கூட அதை எடுத்து அந்த தீபச்சுடரில் வைத்தால் தீபம் மலை ஏறிவிடும்.

அப்படி இல்லை என்றால், மாதுளை பழ குச்சி, நெல்லிக்காய் குச்சு, மருதாணி குச்சி இப்படி இந்த மரத்திலிருந்து சிறிய குச்சிகளை உடைத்து வந்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம். அந்த குச்சிகளை வைத்து விளக்கை மலை ஏற்றலாம். விளக்கு திரியை சரி செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சில பேர் வீடுகளில் ஏற்றிய விளக்கை மலை ஏற்ற வைக்க மாட்டார்கள். தானாக குளிரட்டும் என்று விட்டுவிடுவார்கள். இப்படி செய்வது தவறா சரியா என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால் விளக்கு திரியானது, விளக்கில் முழுமையாக எரிந்து கருகிய வாடை எப்போதுமே வீசக்கூடாது. இதை மட்டும் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

விளக்கின் மீதம் இருக்கும் பழைய எண்ணெயை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துவிட்டு, அதன் பின்பு பூஜை பாத்திரங்களை தேய்க்கலாம். மீண்டும் அந்த பழைய எண்ணெயை விளக்கில் ஊற்றி பூஜையறையில் ஏற்றாதீர்கள். வேறு ஒரு மண் அகலில் ஊற்றி அந்த மண் அகல் விளக்கை நிலை வாசலில் வைத்து ஏற்றலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

காலை மாலை இரண்டு வேளையும் பூஜை அறையில் தீபம் ஏற்றுவது என்பது நல்ல பழக்கம். அது வீட்டிற்கு ஒரு லட்சுமி கடாட்சத்தை கொடுக்க கூடிய விஷயம் தான். கூடுமானவரை முந்தைய நாள், காலையில் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றினீர்களோ, அடுத்த நாள் காலையும் அதே நேரத்தில், விளக்கு ஏற்ற வேண்டும். அதாவது தினம் தோறும் தொடர்ந்து ஒரே நேரத்தில், விளக்கு ஏற்றுவதை கடைபிடித்து வரவேண்டும். இன்று காலை 6.00 மணிக்கு விளக்கேற்றுவது, நாளை காலை 7.00 மணிக்கு விளக்கு ஏற்றுவது, நாளை மறுநாள் காலை 8.00 மணிக்கு விளக்கு ஏற்றுவது என்று நேரத்தை மாற்றாமல் ஒரே நேரமாக தினமும் காலையில் ஒரே நேரத்தில் விளக்கு ஏற்ற ஒரு நேரத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

இன்று நாம் காலை 6.00 மணிக்கு தீபம் ஏற்றி மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் அழைத்திருப்போம். மறுநாள் காலையும் மகாலட்சுமி 6.00 மணிக்கு நம் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் உள்ளே அழைக்காமல் விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி ஒரு சாஸ்திரம் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. மாலையும் அதே போல் தான். மாலை 5.30 மணிக்கு ஏற்றுவதாக இருந்தால் தினமும் அந்த 5.30 க்கு மாலை நேரத்தில் விளக்கு ஏற்றப்பட வேண்டும். அப்படி இல்லையா 6.00 மணி என்றால், தினமும் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்ளவும். எத்தனை பேர் இதை நம்புவீர்கள் என்று தெரியவில்லை. நம்பிக்கை இருந்தால் இந்த குறிப்பையும் பின்பற்றி பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -