தும்பிக்கை கடவுள் விநாயகர் பிறந்த சதுர்த்தியில் தவறாமல் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்னென்ன?

vinayagar-kolukattai-thoppu-karanam
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். இந்த சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபட்டு வருபவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அதில் முக்கியமாக ஆவணி மாதம் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி திதி ரொம்பவே முக்கியமானது. அன்றைய தினத்தில் தான் நம்முடைய தும்பிக்கை கடவுள் விநாயகர் பிறந்திருக்கிறார். இந்த விநாயகர் சதுர்த்தியில் தவறவிடாமல் கடைபிடிக்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

விநாயகர் பெருமானை வழிபடுவது ரொம்பவும் சுலபம். மஞ்சள், சாணம் போன்றவற்றைக் கொண்டு பிடித்து வைத்தால் பிள்ளையார் அதில் ஆவாஹனம் ஆகிவிடுகிறார். முழு முதல் கடவுளாக வழிபடப்படும் இந்த விநாயகர் பெருமான் அருள் செய்வதில் வள்ளலாக விளங்குகிறார். மனதார விநாயகப் பெருமானை நினைத்து வழிபட்டாலே, அவர் வேண்டியதை நிறைவேற்றி விடுகிறார். அவருக்கு பிடித்தமான பொருட்களை நைவேத்தியம் படைத்து விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுபவர்களுக்கு துன்பங்களும், துயரங்களும் உடனே நீங்கி விடுவதாக பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.

- Advertisement -

அரச மரம், ஆலமரம், வன்னி மரம் ஆகிய மரங்களுக்கு அடியில் இருக்கும் விநாயகருக்கு தனி சிறப்புகள் உண்டு. மேலும் எருக்கம் பூ மற்றும் அருகம்புல் ஆகியவை விநாயகருக்கு மாலையாக சூட்ட வேண்டிய பொருட்களாகவும் இருக்கிறது. இவற்றை கட்டாயம் விநாயகர் சதுர்த்தியில் படைப்பது ரொம்பவே விசேஷமானது. எருக்கம் பூ மாலை சாற்றி, அருகம்புல் கட்டு ஒன்றை அவருடைய காலடியில் வைக்க வேண்டும். அரசமரம், ஆலமரம், வன்னி மரத்தின் உடைய இலைகள் கிடைத்தால் அதையும் விநாயகருடைய பாதத்தில் வைத்து வழிபட்டால் நன்மைகள் நடக்கும்.

விநாயகர் சதுர்த்திக்கு தவறாமல் வைக்க வேண்டிய நைவேத்திய பொருட்கள் சுண்டல், பிடி கொழுக்கட்டை, மோதகம், அப்பம், அரிசி பொரி, அவல் பொரி, சர்க்கரை பொங்கல் ஆகியவை ஆகும். இந்த நைவைத்திய பொருட்கள் படைத்து வழிபடும் பொழுது விநாயகர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இவற்றை ஏற்றுக் கொண்டு நமக்கு அருள் பாலிப்பார் என்பது நியதி. எண்ணிய காரியம் எண்ணியபடி நடக்க, விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவது வழக்கம். வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும்.

- Advertisement -

நீங்கள் காதை பிடிக்கும் பொழுது உங்களுடைய கட்டைவிரல் வெளிப்புறமாகவும் மற்ற விரல்கள் உட்புறமாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்யப்படுவதால் உடலில் இருக்கும் குண்டலினி சக்தி தூண்டிவிடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நம் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. எனவே விநாயகர் சதுர்த்தி அன்று தோப்புக்கரணம் போட மறக்காதீர்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு போடுங்கள். அதே போல விநாயகர் சதுர்த்தி அன்று தோப்புக்கரணம் போட்டு முடித்த பின்பு வலது புறம் மூன்று முறை உங்களை நீங்களே சுற்றிக் கொள்ள வேண்டும்.

இது இந்த உலகில் நமக்கு நாமே அனைத்துமாக இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது. இவ்வுலகம் தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவது போல, நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டு, மற்றவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று விநாயக பெருமான் முன்பு இவ்வாறு செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி துவங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு விநாயகரை கண்டிப்பாக வழிபட வேண்டும். அவர் அவரின் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப நாட்களின் எண்ணிக்கை கூடவோ, குறையவோ இருக்கும். ஆனால் மூன்று நாட்கள் தொடர்ந்து விநாயகருக்கு தீபத்தை காண்பித்து, மோதகம் படைத்து வழிபட்டு வந்தால் பரிபூரண அருள் விநாயகரிடம் இருந்து நமக்கு கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

- Advertisement -