ஒரு முக்கியமான காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கும் பொழுது அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் இருக்கக் கூடாது என்றுதான் முதலில் நாம் நினைப்போம். இப்படி காரிய தடைகள் எதுவும் ஏற்படாமல் நடைபெற வேண்டும் என்றால் நாம் விநாயகர் பெருமானையோ அல்லது ஆஞ்சநேயரையோ தான் வழிபட வேண்டும். இவர்கள் இருவருக்கும் தான் இந்த காரிய சித்தியை தரக்கூடிய ஆற்றல் நிறைந்திருக்கிறது என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வெறும் பொட்டு வைத்து எப்படி வழிபட்டு நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
விநாயகர் பொட்டு வழிபாடு
பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் வீட்டில் இருக்கக் கூடிய பூஜை அறையில் வாரத்திற்கு ஒரு முறையாவது சுவாமி படங்களை துடைத்துவிட்டு சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் பொட்டு வைக்கும் பழக்கம் இருக்கும். இதை நாம் வழிபாடாகவே கருத வேண்டும். ஆஞ்சநேயரின் வால் வழிப்பாட்டில் ஆஞ்சநேயரின் வாலுக்கு பொட்டு வைத்து வழிபடுவது ஒரு வேண்டுதலாக இருக்கிறது. அதேபோல் தான் விநாயகருக்கும் பொட்டு வைத்து வழிபடும் முறை என்பது இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மந்த புத்தியில் இருக்கக்கூடிய குழந்தைகளாக இருந்தாலும் படிப்பில் சிறப்பாக விளங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், திருமண தடையால் பாதிக்கப்பட்டவர்களும், விரும்பிய வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், குழந்தை பாக்கிய தடை விலக வேண்டும் என்று நினைப்பவர்களும், இது தவிர்த்து தொழிலின் சிறப்பாக விளங்க வேண்டும், வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்று எந்த செயலாக இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.
எந்த காரியம் நமக்கு நடைபெற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த காரியத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை சங்கடஹர சதுர்த்தி அன்று ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு. அனைவரின் இல்லங்களிலும் விநாயகரின் படம் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். அவருடைய படத்தை பன்னீரை வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக சுத்தமான சந்தனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த சந்தனத்தில் தண்ணீர் ஜவ்வாது இரண்டையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சந்தனத்தை வேறு எதற்கும் உபயோகப்படுத்தக் கூடாது. அதேபோல் தாழம்பூ குங்குமத்தையும் வாங்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். சங்கடஹர சதுர்த்தி அன்று எப்பொழுதும் போல் விநாயகரை நாம் வழிபடும் பொழுது அவருடைய பாதத்தில் சிறிது சந்தனத்தை எடுத்து உங்களுடைய மோதிர விரலால் வைத்து அதற்கு மேல் குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்தப் பாதத்திலிருந்து ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு பொட்டு என்ற வீதம் விநாயகரை சுற்றி ஓம் என்னும் வடிவில் வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூற வேண்டும். அந்த வேண்டுதல் நிறைவடைந்த பிறகு அல்லது ஓம் என்னும் எழுத்து முழுமை அடைந்த பிறகு விநாயகப் பெருமானின் ஆலயத்திற்கு சென்று அவருக்கு அபிஷேக ஆராதனைகளை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் நீங்க முருகன் மந்திரம்
இப்படி ஒவ்வொரு பொட்டாக வைத்து விநாயகரை நாம் வழிபடுவதன் மூலம் ஓங்காரத்தின் தத்துவத்தை வெளிப்படுத்திய விநாயகர் பெருமானுக்கு ஓம் என்னும் பொட்டு வைப்பதன் மூலம் நாம் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என்று முழு நம்பிக்கை இருப்பவர்கள் இந்த வழிபாட்டை முறையாக செய்து பலன் பெறலாம்.