நாவில் கரையும் கோதுமை அல்வா எளிதாக செய்வது எப்படி? நெய், சர்க்கரை எதுவுமே இதில் சேர்க்க வேண்டாமா?

wheat-halwa_tamil
- Advertisement -

கோதுமை அல்வா செய்வது எப்படி

கோதுமை மாவு அல்வா நாவில் கரையும் படி அற்புதமான சுவையில் நம்முடைய வீட்டில் எளிதான முறையில் எப்படி செய்வது? இந்த கோதுமை மாவு அல்வாவிற்கு நெய் அல்லது சர்க்கரை எதுவுமே தேவையில்லை! வெறும் வெல்லத்தை வைத்து செய்யப்படும் இந்த கோதுமை அல்வா செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. எல்லோருமே விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் ஆரோக்கியமான கோதுமை அல்வா ஈஸியான வகையில் எப்படி செய்வது? என்பதை இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கோதுமை அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒன்றரை கப், தேங்காய் பால் – ரெண்டு கப், தண்ணீர் – மூன்று கப், உப்பு – ஒரு சிட்டிகை, பொடித்த வெல்லம் – ரெண்டு கப், பொடித்த முந்திரி பருப்பு – சிறிதளவு, ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

கோதுமை அல்வா செய்முறை விளக்கம்:

கோதுமை அல்வா செய்வதற்கு நெய், சர்க்கரை எதுவுமே தேவையில்லை. வெல்லம் இருந்தால் போதும் சுவையான டேஸ்டியான கோதுமை அல்வா அட்டகாசமாக தயார் செய்ய முடியும். இதற்கு முதலில் ஒன்றை கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிசைந்து வைத்த மாவுடன் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் நன்கு ஊற விட்டு விடுங்கள். மாவு நன்கு தண்ணீரில் ஊறியதும் அதை கைகளால் கரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் மாவை கரைத்த பின்பு சிறிதளவு திப்பிகள் இருக்கும். இதை நன்கு வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த தண்ணீரை ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். அப்பொழுது தான் மேலே தேவையற்ற தண்ணீர் தெளிந்து வரும்.

- Advertisement -

ஒரு மணி நேரம் கழித்து தெளிந்த தண்ணீரை மட்டும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு எடுத்து கீழே ஊற்றி விடுங்கள். மீதம் இருக்கும் இந்த கோதுமை பாலுடன் ரெண்டு கப் அளவிற்கு கெட்டியான தேங்காய் பாலை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் இரண்டு கப் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் கரைந்ததும் அதை சுத்தமாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்து நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கோதுமை பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து ஓரளவுக்கு கெட்டியாக திரண்டு வரும் பொழுது நீங்கள் வெல்லப் பாகை ஊற்ற வேண்டும். பின்பு மீண்டும் நன்கு கலந்து விடுங்கள். தண்ணீர் எல்லாம் வற்றி மேலே தெறிக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் நீங்கள் ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த முந்திரிகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தூவி கொள்ள வேண்டும். பின்பு எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு நீங்கள் இடைவிடாமல் கரண்டியை வைத்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கும்பகோணம் ஸ்பெஷல் பாரம்பரியமான முறையில் கடப்பா எப்படி எளிதாக நம் வீட்டிலும் செய்வது? இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள செம டேஸ்டாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க!

இப்படி செய்யும் பொழுது பேனில் ஒட்டாமல் எல்லா மாவும் அல்வா போல நன்கு திரண்டு வரும். இதன் நிறம் போக போக மாற்றம் அடையும். சாதாரண நிறத்தில் இருந்து, நல்ல டார்க் பிரவுன் நிறத்திற்கு மாறியதும், பேனில் ஒட்டாமல் திரண்டு அல்வா போல உங்களுக்கு தெரிய வரும். அந்த சமயத்தில் நீங்கள் அடுப்பை அணைத்து சுடச்சுட சுவையான இந்த கோதுமை மாவு அல்வாவை பரிமாற வேண்டியதுதான். ரொம்பவே ஆரோக்கியமான இந்த கோதுமை மாவு அல்வாவை இவ்வளவு ஈஸியா நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள், வீட்டில் எல்லோருக்குமே பிடிக்கும்.

- Advertisement -