கோதுமை மாவில் முட்டை பரோட்டாவா? இவ்வளவு ஈசியாக சுவையான கோதுமை மாவு முட்டை பரோட்டா எப்படி செய்வது?

parotta-egg
- Advertisement -

பொதுவாக மைதா மாவில் தான் பரோட்டா செய்வார்கள். ஆனால் கோதுமை மாவிலும் இது போல முட்டை பரோட்டா செய்தால் எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். மைதா மாவு பரோட்டாவை விட, கோதுமை மாவு பரோட்டா உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது. எனவே ரொம்ப சுலபமாக மூன்று முட்டைகளை வைத்து கோதுமை மாவில் எப்படி ஈஸியான முட்டை பரோட்டா செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

கோதுமை மாவு முட்டை பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், முட்டை – 3, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

கோதுமை மாவு முட்டை பரோட்டா செய்முறை விளக்கம்:
கோதுமை மாவு முட்டை பரோட்டா செய்வதற்கு ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். மேற்கூறிய பொருட்கள் அத்தனையும் ஒரு கப் அளவிற்கு ஆனது. உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் அதனை கூட்டி குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் கோதுமை மாவை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளுங்கள். மிருதுவாக வருவதற்கு எண்ணெய் அல்லது நெய் சேர்க்க வேண்டும். மாவை எந்த அளவிற்கு நீங்கள் அடித்து துவைத்து பிசைகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு மாவு மிருதுவாக கிடைக்கும்.

பரோட்டா மாவு பிசைவது போல நன்கு மாவை பிசைந்து ரொம்பவும் மெல்லியதாக தேய்க்க வேண்டும். எப்பொழுதும் சப்பாத்திக்கு மாவு நீங்கள் தேய்க்கும் பொழுது எண்ணெய் பயன்படுத்தாமல் மாவு பயன்படுத்துவது நல்லது. அதே போல பூரிக்கு தேய்க்க மாவு பயன்படுத்தாமல் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. இப்போது உள்ளே ஸ்டஃப்பிங் செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்வோம். ஒரு கப்பில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றுங்கள். அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய வெங்காயத்தை முட்டையுடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

காரத்திற்கு 2 பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு சேர்த்து கலந்து விடுங்கள். இதில் கறிவேப்பிலை எல்லாம் சேர்க்க வேண்டாம். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். ஒரு கப் கோதுமை மாவுக்கு மூன்று முட்டைகள் சரியாக இருக்கும். நீங்கள் எத்தனை கப் மாவு எடுக்கிறீர்களோ அதற்கு ஏற்ப இதன் அளவுகளையும் அதிகரித்துக் கொள்ளுங்கள். இப்போது கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து எடுத்து அதை எவ்வளவு மெல்லியதாக பெரிதாக தேய்க்க முடியுமோ அவ்வளவு பெரிதாக தேய்த்துக் கொள்ளுங்கள்.

பூரி கட்டை போதவில்லை என்றால் நீங்கள் காய்கறி நறுக்கும் கட்டர் பயன்படுத்திக் கொள்ளலாம். மெல்லியதாக பெரிய அளவில் தேய்த்த பின்பு உள்ளே நீங்கள் ஸ்டஃப்பிங் செய்ய முட்டை கலவையை சேர்த்து நான்கு புறமும் மடித்துக் கொள்ள வேண்டும். முதலில் இரண்டு புறம் மடிக்கும் பொழுது லேசாக தண்ணீரைத் தொட்டு மடித்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். அதே போல மற்ற இரு புறங்களிலும் மடித்து செவ்வக வடிவில் கொண்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் தோசை கல்லில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு மெதுவாக இதை போட்டு எடுங்கள். ஒருபுறம் நன்கு வேகும் பொழுது உள்ளே இருக்கும் முட்டையும் வேக துவங்கும். அதன் பிறகு திருப்பிக் கொள்ளுங்கள். இப்பொழுது முழுமையாக பரோட்டா சுவையில் கோதுமை மாவும், உள்ளே இருக்கும் முட்டை மசாலாவும் வெந்திருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை, அப்படியே தட்டில் வைத்து சுடச்சுட சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.

- Advertisement -