உங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளின் பொழுது அன்றைய தினத்தை இனிமையாக கொண்டாட இந்த ஆப்பிள் கேசரி செய்து அனைவரும் மகிழ்ச்சியாக சுவைத்துப் பாருங்கள்

kesari1
- Advertisement -

பிள்ளைகளின் பிறந்தநாள், பெற்றோர்களின் திருமண நாள் மற்றும் சுபமான அனைத்து தினங்களிலும் இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுவது தான் தமிழர் மரபாக உள்ளது. எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் இனிப்பு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் வைத்துள்ளனர். இவ்வாறு இனிப்பு என்பது மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. அதே போல் இந்த இனிப்பை கடைகளில் வாங்கி கொடுப்பதை தவிர்த்து, வீட்டிலேயே செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான இனிப்புப் பலகாரத்தை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப் போகின்றோம். எப்பொழுதும் செய்யும் கேசரியில் ஆப்பிள் சேர்த்து செய்யும் பொழுது அதன் சுவை சற்று வித்தியாசமாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும். வாருங்கள் இந்த ஆப்பிள் கேசரியை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், ஆப்பிள் – 1, சர்க்கரை – ஒரு கப், நெய் – 3 ஸ்பூன், முந்திரி பருப்பு – 15, திராட்சை – 10, கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த் தூள் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு ஆப்பிளை எடுத்துக் கொண்டு, அதன் மேல் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும். பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கப் ரவையை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த கப்பில் ரவை அளக்கின்றோமோ அதே கப்பில் ஒரு கப் சர்க்கரையையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே கப்பில் 3 கப் தண்ணீரை அளந்து எடுத்துக் கொண்டு, ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அடுப்பை பற்ற வைத்து, தண்ணீர் உள்ள பாத்திரத்தை அதன் மீது வைத்து கொதிக்க விட வேண்டும். பிறகு மற்றொரு அடுப்பின் மீது ஒரு பேன் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நெய்யில் 15 முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள ஆப்பிளையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஒரு தட்டிற்க்கு மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதே நெய்யில் ரவையை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் கொதிக்க வைத்துள்ள தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். ரவை கொதித்து வேகும் வரை அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ரவை நன்றாக வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கலந்து விடவேண்டும். சிறிது நேரத்தில் இவை கெட்டியான பதத்திற்கு வந்ததும், இவற்றுடன் ஒரு சிட்டிகை கேசரி பவுடரை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் கலந்து விட்ட பிறகு, வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஆப்பிள் இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து விட்டு, 5 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஆப்பிள் கேசரி தயாராகிவிட்டது.

- Advertisement -