சமைப்பது பெரிய வேலையாக இருந்தாலும் அதனை வீட்டில் உள்ள பெண்கள் எளிமையாக செய்து விடுவார்கள். ஆனால் குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது மிகப் பெரிய காரியமாக இருக்கிறது. அவர்கள் ஒரு வாய் உணவு சாப்பிட ஒரு மணி நேரம் போராட வேண்டி இருக்கும். அந்த அளவிற்கு குழந்தைகள் சாப்பிடுவதில் விருப்பமாக இருப்பதில்லை. அவர்களுக்குப் பிடித்த உணவு என்றால் ஐந்தே நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பார்கள். குழந்தைகளுக்கு பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் உணவுகளை செய்து வைத்தால் போதும். அவர்களுக்கு ஒரு புதுவித ஆர்வம் வந்துவிடும். எனவே அந்த உணவை சுவைத்து பார்க்க தயாராகி விடுவார்கள். அவ்வாறு சற்று வித்தியாசமான சுவையுடனும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கக்கூடிய இந்த மசாலா கொழுக்கட்டையை ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள். அனைவரும் அடுத்த நொடியிலேயே சாப்பிட்டு முடிப்பார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 3, பழுத்த தக்காளி – 3, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, கரம் மசாலாத்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் 2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனை அடுப்பின் மீது வைத்து கொதிக்க விட வேண்டும். பிறகு தண்ணீர் கொதிக்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு கப் அரிசி மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு, அரிசி மாவை ஆற வைக்க வேண்டும்.
பிறகு அரிசி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதன் மீது ஒரு இட்லி தட்டை வைத்து, அதில் லேசாக எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள அரிசி மாவு உருண்டைகளை அதில் வைத்து, மூடி போட்டு மூடி, பத்து நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும்.
பின் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று தக்காளிப் பழங்களைப் பொடியாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து, அதில் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, இதனுடன் தக்காளி சாறையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, கெட்டியானதும் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் வேக வைத்துள்ள அரிசி மாவு உருண்டைகளை சேர்த்து கலந்துவிட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்தால் போதும், சுவையான மசாலா கொழுக்கட்டை தயாராகிவிடும்.