அட! மீன் குழம்பை இப்படிக்கூட செய்யலாமா? என்று நீங்கள் அசந்து போகும் சுவையுடன் ஒரு சூப்பரான மீன் குழம்பு

meen
- Advertisement -

மீன் குழம்பு செய்வது எப்படி தமிழ் | Fish Kulambu Recipe in Tamil

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றைவிட உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்றால் அது மீன் வகைகள் தான். மீன்களில் உடம்பிற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. எனவே சிறுவயது முதலே குழந்தைகளுக்கு மீன் சாப்பிடக் கொடுத்து பழக்குவது மிகவும் நல்ல விஷயமாகும். அதிலும் மீன்களை வறுப்பதை விட, குழம்பில் சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும். அவ்வாறு பெருமளவில் மீன் குழம்பு வைப்பது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு வழக்கம் தான். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பலரது வீட்டிலும் மீன் குழம்பு தான் இருக்கும். ஆனால் எப்பொழுதும் புளிக்கரைசல், மிளகாய் தூள் போட்டு ஒரே விதமான மீன் குழம்பை தான் பலரும் செய்கின்றனர். ஆனால் ஒரு முறை இப்படி மசாலா அரைத்து செய்து பாருங்கள். இதன் சுவை மிகவும் அசத்தலாக, அமோகமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 10, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, புளி – 150 கிராம், இஞ்சி சிறிய துண்டு – 3, பூண்டு – 10 பல், சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகு – கால் ஸ்பூன், தனி மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன் தனியா தூள் – 4 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – 100 கிராம், கடுகு – அரை ஸ்பூன், வடகம் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – இரண்டு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.

- Advertisement -

மீன் குழம்பு செய்முறை:

முதலில் புளியை ஊறவைத்து, நன்றாக கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும். பின்னர் 5 சின்ன வெங்காயம் மற்றும் இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 5 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, சோம்பு, சீரகம், மிளகு, மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் உப்பு, தனியாத்தூள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் 10 பல் பூண்டை உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு மற்றும் ஒரு ஸ்பூன் வடகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதில் இரண்டு வரமிளகாய், தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி இவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இதே எண்ணையில் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து தொக்கு பதத்திற்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இவை நன்றாக வதங்கியதும் இதனுடன் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவேண்டும். குழம்பு நன்றாக கொதித்ததும் இதனுடன் மீன் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து, தட்டு போட்டு மூடி மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டால், சுவையான மசாலா மீன் குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -