காலை அவசர அவசரமாக சமைக்கும் பொழுது அசைவ உணவை சமைக்க முடியாது. எனவே குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த முட்டை தொக்கு செய்து சாதம் கிளறிக் கொடுத்து பாருங்கள் சரியாக சாப்பிடாத குழந்தைகள் கூட முழுவதும் சாப்பிட்டு முடிப்பார்கள்

egg-gravy
- Advertisement -

காலை நேரத்தில் அனைவரது வீடும் போர்க்களம் போன்று தான் காட்சியளிக்கும். ஒருபுறம் குழந்தைகளும், மறுபுறம் வீட்டில் உள்ள ஆண்களும் வேலைக்கு செல்லவும், பள்ளிக்கு செல்லவும் தயாராகிக் கொண்டிருப்பார்கள். ஒருபுறம் சமையலறையில் வீட்டுப் பெண்மணிகள் அவர்களுக்கு தேவையான உணவுகளை தயார் செய்து கொண்டிருப்பார்கள். இதுபோன்ற நேரத்தில் எளிமையான உணவுகளை மட்டும் தான் சமைக்க முடியும். அசைவ உணவுகளை சமைத்துக் கொண்டிருந்தால் நேரம் போதுமானதாக இருக்காது. எனவே சில நேரங்களில் அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு முட்டை வைத்து இவ்வாறு முட்டை தொக்கு செய்து கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதனுடன் சாதத்தை கிளறி லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பும் பொழுது மதியம் சாப்பிடுவதற்கு இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த முட்டை தொக்கை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
முட்டை – 5, வெங்காயம் – 4, தக்காளி – 7, பச்சைமிளகாய் – 2, மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 6 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஐந்து முட்டைகளையும் பாத்திரத்தில் வைத்து, அதனை அடுப்பின் மீது வைத்து முட்டைகளை வேக வைக்க வேண்டும்.

முட்டைகள் அனைத்தும் நன்றாக வெந்ததும், அவற்றை வெளியே எடுத்து ஆற வைத்து, அதன் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு, முட்டையின் மேல்புறத்தில் லேசாக கீறி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடேறியதும் அதில் 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி விடவேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் சேர்த்த உடனேயே சிறிதளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து தக்காளி குழையும் வரை நன்றாக வதக்கவேண்டும். பின்னர் ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் மீதமுள்ள உப்பு அனைத்தையும் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இந்த கலவை நன்றாக கொதித்து மிளகாய் தூள் வாசனை சென்றதும், இதனுடன் வேகவைத்த முட்டைகளை சேர்த்து கலந்து விட்டு, கொத்தமல்லியைத் தூவினால் சுவையான முட்டை தொக்கு தயாராகிவிடும்.

- Advertisement -