இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இப்படி சுவையான கெட்டிசால்னாவை ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவையில் உங்களையும் அறியாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள்

salna
- Advertisement -

ஒவ்வொரு நாளும் காலை முதல், இரவு வரை என்ன உணவு சமைப்பது என்ற யோசனைதான் பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் தாங்கள் சமைக்கும் உணவினை வீட்டில் உள்ளவர்கள் ரசித்து சாப்பிடுவதோடு, திருப்தியாகவும் சாப்பிட வேண்டும் என்ற கவனம் அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. எனவே வீட்டில் உள்ளவர்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என யோசித்து தான் உணவை சமைத்துக் கொடுக்கின்றனர். அப்படி காலை மற்றும் இரவு நேரங்களில் அனைவரும் உண்ணும் உணவு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என மாறிவிட்டது. இதனுடன் தொட்டுக்கொள்ள என்ன செய்தாலும் மறுபடியும் அவற்றை திரும்பத் திரும்ப செய்துதான் ஆகவேண்டும். ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் எப்போதும் விரும்பி சாப்பிட இந்த சுவையான கெட்டி சால்னாவை செய்து கொடுத்தீர்கள் என்றால் எத்தனை முறை செய்தாலும் தட்டாமல், விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த சுவையான சால்னாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 1, தேங்காய் – அரைமூடி, முந்திரிப் பருப்பு – 10, கசகசா – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – 4, சோம்பு – 2 ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கிராம்பு– 3, ஏலக்காய் – 2, அன்னாசிப்பூ – 1, புதினா தழை – ஒரு கைப்பிடி, எண்ணெய் – 6 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து, அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு இவற்றுடன் இரண்டு துண்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ இவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் 15 சின்ன வெங்காயம் மற்றும் ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றை ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்ந்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை மூடி தேங்காயை பொடியாக துருவிக் கொண்டு, அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் ஊறவைத்த கசகசா மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது கடாயை வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு இரண்டு துண்டு பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் ஒரு கைப்பிடி புதினா தழை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, நன்றாக கொதிக்க வைத்து, இறுதியாக கொத்தமல்லி தழை சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கெட்டிசால்னா தயாராகிவிட்டது.

- Advertisement -