குக்கரை திறந்ததும் அக்கம் பக்கத்து வீட்டாரும் கேட்பார்கள், இன்று என்ன அசைவம் விருந்தா என்று. அந்த அளவிற்கு இந்த தக்காளி குழம்பு அசைவ குழம்பின் சுவையில் அசத்தலாக இருக்கும்.

tomato
- Advertisement -

மதியம் சுடச்சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒரு சில குழம்புகள் மட்டுமே மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். அதிலும் உங்கள் வீட்டில் அசைவ உணவு என்றால் சாதம் சற்று கூடுதலாக தேவைப்படும். ஏனென்றால் அசைவ உணவு சமைத்து கொடுத்தால் எப்பொழுதும் சாப்பிடுவதை விட சற்று கூடுதலான அளவில் தான் அனைவரும் உணவு உண்பார்கள். அசைவ உணவில் சேர்க்கப்படும் மசாலாவின் சுவை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். எனவே அசைவம் சேர்க்காமல் அதே சுவையில் மிகவும் அசத்தலான தக்காளி குழம்பை செய்து வைத்தாலும் அன்றும் அனைவரும் அதிகமாகவே சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இந்த தக்காளி குழம்பு அசத்தலான சுவையில் இருக்கும். வாருங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த சுவையான தக்காளி குழம்பை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 15, பெரிய தக்காளி – 5, பூண்டு – 5 பல், தேங்காய் – 2 சில்லு, தனியா – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், மிளகாய் – 4, பட்டை சிறிய துண்டு – 1, ஏலக்காய் – 1, பிரியாணி இலை – 1, இஞ்சி சிறிய துண்டு – 1, மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் தனியா, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய் மற்றும் இரண்டு சில்லு தேங்காயைத் துருவிக் கொண்டு இவற்றுடன் சேர்த்து நன்றாக வறுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

பின்னர் அதே கடாயில் தக்காளி பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கி, அதனையும் மற்ற மசாலாவுடன் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு 15 சின்ன வெங்காயம் மற்றும் 5 பூண்டை இடித்து சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் பேஸ்ட்டாக அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி விட்டு, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, இதனுடன் உப்பு சேர்த்து கலந்துவிட்டு, கொத்தமல்லி தழை தூவி, குக்கரை மூடி 2 விசில் வைத்து இறக்கினால் போதும். சுவையான தக்காளி குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -