சப்பாத்திக்கு பூரிக்கு தொட்டுக்கொள்ள இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்யலாம். தயிர் சாதம், ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்யலாம். லெமன் சாதம், புளி சாதம், இவைகளுக்கு தொட்டு சாப்பிடவும் இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்யலாம். பொடி மாஸுக்கு கூடுதல் சுவை தர இந்த ஸ்பெஷல் மசாலா அரவையை அரைத்து போட்டு, இப்படி பொடிமாஸ் செய்தால், இந்த ரெசிபி அத்தனை சுவை தரும். மசாலா வாசத்துடன் அருமையான உருளைக்கிழங்கு ரெசிபி இதோ உங்களுக்காக.
உருளைக்கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வது
முதலில் 1/2 கிலோ அளவு உருளைக்கிழங்கு எடுத்து தோலுடன் குக்கரில் போட்டு, உப்பு போட்டு மூன்றில் இருந்து நான்கு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த உருளைக்கிழங்குகளை எடுத்து நன்றாக ஆற வைத்து, தோல் சீவி துண்டு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது மசித்தும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். இந்த வேகவைத்த உருளைக்கிழங்கு அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக இதற்கு அரைக்க வேண்டிய ஸ்பெஷல் மசாலா அறவையை பார்ப்போம். அதில் பூண்டு பல் 10, வரமிளகாய் 2, சோம்பு 1/2 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, பட்டை 1 சின்ன துண்டு, கிராம்பு 1, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதும் அப்படியே இருக்கட்டும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு 1/2 ஸ்பூன், பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது 1, கருவேப்பிலை 1 கொத்து, போட்டு தாளித்து விடுங்கள். அதன் பின்பு நசுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை கடாயில் போட்டு, தேவைப்படும் அளவுக்கு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக கலந்து விட்டு பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இதோடு போட்டு நன்றாக கலந்து விட்டு விடுங்கள்.
அடுப்பை சிம்மில் வைக்கவும். இந்த உருளைக்கிழங்கு பொடி மாசுக்கு மேலே 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அப்படியே மூடி போட்டு எட்டில் இருந்து பத்து நிமிடம் சிவக்க வைக்க வேண்டும். மசாலா அரவையின் பச்சை வாசனை நீங்க வேண்டும். இடை இடையே பொடிமாஸை கிளறி விட்டுக் கொண்டே இருங்கள். எட்டு நிமிடமும் அப்படியே விட்டு விட்டால் அடிப்பிடித்து விடும்.
இதையும் படிக்கலாமே: பத்தே நிமிஷத்துல சுவையான இன்ஸ்டன்ட் தயார் செய்யலாம். இதுக்கு அரிசி ஊற வைத்து அரைக்கவும் தேவையில்லை. மாவு, ஈனோ என எதுவுமே தேவையில்லை சட்டுனு ரெடி பண்ண கூடிய சூப்பர் தோசை ரெசிபி
இதன் மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சுட சுட சாப்பிட்டால் அத்தனை சுவை கொடுக்கும். சுட சுட சாதத்திற்கு கூட இதை போட்டு பிசைந்து சாப்பிடலாம். உங்களுக்கு அருமையான இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் படிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.