தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று தோசை. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தங்கள் உடல் எடையை குறைக்க என்னென்னமோ செய்கிறார்கள். நாம் இந்த பதிவில் தோசையை சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை குறைக்கப் போகிறோம். ஆம், சாதாரண தோசையை சாப்பிடுவதை விட கொள்ளு தோசை சாப்பிட்டால் நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். வாருங்கள் கொள்ளு தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 4 கப், கொள்ளு – 1 கப், வெந்தயம் – 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை
முதலில் அரிசி, கொள்ளு, வெந்தயம் இந்த மூன்றையும் ஒன்றாக தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். இரண்டு முறை கழுவியப் பிறகு, தண்ணீர் ஊற்றி அதை ஊற வைக்க வேண்டும். ஆறு மணி நேரம் ஊறிய பிறகு, அந்த அரிசி, கொள்ளு, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த தண்ணீரை ஊற்றியே மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்த பிறகு அதில் தேவையான அளவு உப்பை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு மாவு நன்றாக பொங்கி வருவதற்காக அப்படியே ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வைத்துவிடவேண்டும். ஆதலால் இரவே மாவை அரைத்து வைத்தால், மாவு பொங்கி வந்து காலையில் தோசை ஊற்றுவதற்கு வசதியாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: வல்லாரை கீரை துவையல் செய்வது எப்படி
மாவு பொங்கிய பிறகு ஒரு கரண்டியை எடுத்து நன்றாக மாவை கிளறி விட வேண்டும். பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசை கல் சூடானதும், ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை கல்லில் ஊற்ற வேண்டும். இந்த தோசைக்கு எண்ணெய் தேவை படாது. ஒருபுறம் சிவந்த பிறகு அந்த தோசையை தோசை கரண்டியால் திருப்பிப் போட்டு மறுபுறமும் சிவக்க விட்டு எடுத்து விட வேண்டும். இந்த கொள்ளு தோசையை வெங்காய சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி இவைகளோடு பரிமாறலாம்.