குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபகம் மறதி என்பது அன்றாட வாழ்வில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை தவிர்ப்பதற்கு நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நினைவாற்றலை வளர்ப்பதற்கு வல்லாரைக்கீரை உதவுகிறது. இந்த வல்லாரைக் கீரையை நாம் வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை எடுத்துக் கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். குழந்தைகள் கீரைகளை உண்பதை விரும்ப மாட்டார்கள். ஆதலால் இந்த வல்லாரைக் கீரையை துவையலாக நாம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவர். அப்படிப்பட்ட வல்லாரைக் கீரையை வைத்து துவையல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் நாம் காண்போம்.
தேவையான பொருட்கள்
வல்லாரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, உளுந்தம் பருப்பு – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு – இரண்டு பல், எண்ணெய் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
முதலில் வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து, கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து, அது சூடேறியதும் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அதில் வல்லாரைக் கீரையை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வதக்கிய வல்லாரைக் கீரையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் எண்ணெயில் உளுந்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்க வேண்டும். பிறகு அதில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருந்த வெங்காயத்தையும், பூண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை பாரம்பரிய முறையில் வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது எப்படி?
வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் போட்டு, அவற்றுடன் தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான வல்லாரைக் கீரை துவையல் தயாராகிவிட்டது. இதை நாம் குழந்தைகளுக்கு சூடான சாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு கலந்து கொடுக்கலாம், அல்லது இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும் கொடுக்கலாம்.