முட்டையை வைத்து வெரைட்டி வெரைட்டியாக எத்தனையோ டிஷஸ் செய்யலாம். இன்று நாம் பார்க்கப்போவது எளிமையான முறையில் முட்டை சுக்கா எப்படி செய்வது என்றுதான். மிக மிக எளிமையான முறையில் முட்டை சுக்காவை குறைந்த நேரத்தில் செய்துவிடலாம். எல்லோருக்கும் பிடித்த சுவையில் செய்துவிடலாம். முட்டையே எனக்கு பிடிக்காது என்பவர் கூட இப்படி மசாலா சேர்த்து சமைத்துக் கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள். அதுவும் இந்த சண்டேவில் இந்த ரெசிபி உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். வாங்க நேரத்தை கலக்காமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
செய்முறை
இந்த முட்டை சுக்கா செய்வதற்கு 5 லிருந்து 6 முட்டைகளை தண்ணீரில் போட்டு வேகவைத்து தோல் உரித்து இரண்டாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் மஞ்சள் கருவை முதலில் நீக்கிவிடுங்கள். மஞ்சள் கருவை வீணாக்க வேண்டாம். மசாலா போட்டு வீட்டில் இருப்பவர்கள் பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். வெறும் வெள்ளை கருவை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த வெள்ளை கருவில் தான் இந்த முட்டை சுக்கா ரெசிபி தயார் செய்யப் போகின்றோம்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், போட்டு தாளித்துக் கொள்ளவும். இதில் மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, கருவாப்பிலை – 1 கொத்து, போட்டு நன்றாக வதக்குங்கள். வெங்காயம் வதங்கி சுருண்டு வரும் போது, இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன் போட்டு நன்றாக வதக்கி விடுங்கள்.
இஞ்சி பூண்டின் பச்சை வாடை நீங்கியதும், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், தனியா தூள் – 1 ஸ்பூன், போட்டு 30 செகண்ட் வரை எண்ணெயிலேயே வதைக்க விட்டு, ஒரு 1/4 கப் அளவு தண்ணீரை அதில் ஊற்றி மசாலாவும் வெங்காயமும் வெந்து கிரேவி பக்குவத்திற்கு வரும்வரை காத்திருக்கவும். 2 நிமிடத்தில் வெங்காயம் அந்த தண்ணீரில் வெந்து சுண்டி கிடைத்து விடும்.
இப்போது இந்த வெங்காய தொக்கில் வேக வைத்து வெட்டி வைத்திருக்கும் முட்டைகளை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, 2 நிமிடம் நன்றாக கலந்து விடுங்கள். முட்டையில், அந்த மசாலா எல்லாம் கலந்து வர வேண்டும். இறுதியாக மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன், சோம்புத்தூள் – 1/4 ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி ஒருமுறை கலந்து விட்டு ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விட்டால், சூப்பரான முட்டை சுக்கா மணக்க மணக்க தயாராகி இருக்கும்.
இதையும் படிக்கலாமே: அருமையான காலிஃப்ளவர் கிரேவி 3 விசிலில் எப்படி தயார் செய்வது? சூடான சாதத்துடனும், வெரைட்டி டிபன் வகைகளுடனும் தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்குமே!
இதில் நம் கரம் மசாலா எதுவுமே சேர்க்கவில்லை. வெறும் சோம்பு மட்டும்தான் சேர்த்திருக்கின்றோம். ஆனால் இதனுடைய வாசமும் சுவையும் அத்தனை அருமையாக இருக்கும். எளிமையான இந்த ரெசிபியை இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க. தேவைப்படுபவர்கள் முட்டையை இரண்டாக வெட்டி அதன் உள்ளே இருக்கும் மஞ்சள் கருவோடு சேர்த்தும் இந்த சுக்கா செய்யலாம். ஆனால் அந்த மஞ்சள் கரு வெளியில் வராதபடி, இரண்டு பக்கமும் மசாலா படும்படி, அகலமான பேனில் இதை பக்குவமாக செய்ய வேண்டும். சண்டே ஸ்பெஷலா உங்க வீட்ல ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் பாராட்டு வாங்குவீங்க.