சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் எப்போதும் ஓரே மாதிரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக பீர்க்கங்காயை வைத்து ஒரு அருமையான கிரேவி ரெசிபி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த முறையில் செய்து கொடுத்துப் பாருங்கள். இந்தக் காயில் கூட இவ்வளவு சுவையாக செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சுவை அட்டகாசம் ஆக இருக்கும்.
செய்முறை
இந்த கிரேவி செய்வதற்கு முதலில் பீர்க்கங்காயை மேல் தோல் சீவி சுத்தம் செய்த பிறகு நறுக்கி ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதன் தோலை கூட நாம் வீணாக்க தேவையில்லை. இதை வைத்து துவையல், சட்னி போன்றவை செய்யலாம்.
அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இதற்கு எண்ணெய் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும். எண்ணெய் சூடான பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுந்து சேர்த்து இவை எல்லாம் பொரிந்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதில் வெங்காயம் சேர்த்து வதக்கும் போது இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து வெங்காயம் பாதி அளவு வதங்கிய பிறகு நாம் நறுக்கி வைத்த பீர்க்கங்காயை இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கி விடுங்கள். இந்த பீர்க்கங்காய் எண்ணெயில் நன்றாக வதங்கி தண்ணீர் வற்றி காய் சின்னதாக சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
பீர்க்கங்காய் நன்றாக வதங்கிய பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு இவையெல்லாம் சேர்த்து அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து எண்ணெயிலே இதன் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
இந்த கிரேவியை வதக்கும் போது எந்த இடத்திலும் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்கக் கூடாது இது மிகவும் முக்கியம். இந்த காய் மசாலா எல்லாம் வதங்கிய பிறகு ஒரு கப் தேங்காய் பாலை ஊற்றி மீண்டும் ஒரு முறை கலந்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டால் எண்ணெய் பிரிந்து மேலே வந்து அருமையான பீர்க்கங்காய் கிரேவி தயாராகி விடும்.
இதையும் படிக்கலாமே: மூணு தக்காளியும் ஒரு வெங்காயம் இருந்தா சப்பாத்தி பூரி தோசைக்கெல்லாம் ஒரு ஸ்பெஷலான ஆனியன் மசாலா ரெடி. அப்படியே இது ஸ்பெஷலா இருக்குறதுக்கான சீக்ரெட் டையும் தெரிஞ்சுக்கோங்க.
இந்த கிரேவியை நீங்கள் ஒரு முறை செய்து கொடுத்து விட்டால் போதும். இனி உங்கள் வீட்டில் அடிக்கடி இதையே செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு இந்த பீர்க்கங்காய் கிரேவி மிகவும் அருமையான சுவையில் இருக்கும். நீங்களும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.