ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் அந்த குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் தேவையற்ற பிரச்சனைகளை பெரியதாக்கி சண்டை போடுவதை தவிர்த்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதே நல்ல வாழ்க்கையை மேம்படுத்தும். அந்த வகையில் கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஏற்ற வேண்டிய தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க தீபம் ஏற்றும் முறை
கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருந்தால்தான் அவர்களுடைய குடும்பம் விருத்தி அடையும் என்று கூறப்படுகிறது. அப்படியே குழந்தை பாக்கியம் கிடைத்துவிட்டாலும் அந்த குழந்தைகள் நன்றாக வளர வேண்டும் என்றாலும் கணவன் மனைவி எந்தவித சண்டையும் போடாமல் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். மேலும் சமுதாயத்தினர் மதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் துணையுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதனால் தான் அன்றைய காலத்தில் கணவனையும் மனைவியையும் மாட்டு வண்டியில் இருக்கக்கூடிய இரண்டு சக்கரங்கள் என்றும் அதில் ஏதாவது ஒன்று பழுதடைந்து விட்டாலும் வாழ்க்கை என்ற வண்டி ஓடாது என்றும் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் பலரும் சகிப்புத்தன்மை அற்று விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற மனோபாவம் இல்லாமல் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டு ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழும் சூழ்நிலையை உண்டாக்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையை தவிர்த்து ஒற்றுமையுடனும் எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி வாழ்வதற்கு சிவபெருமானையும் பார்வதி தேவியையும் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த தீபத்தை சிவபெருமானுக்குரிய கிழமையான திங்கட்கிழமை அன்று தான் ஏற்ற வேண்டும். ஆலயத்திற்கு சென்றும் ஏற்றலாம். ஆலயத்திற்கு செல்ல இயலாது என்பவர்கள் தங்களுடைய வீட்டிலும் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது மாலை 4:30 மணியிலிருந்து 6 மணி வரை அதாவது பிரதோஷ வேளையில் தான் இந்த தீபத்தை சிவபெருமானுக்கு முன்பாக ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சள் நிற திரி போட்டு அந்த அகல் விளக்கில் ஒரு சொட்டு தேனையும் சேர்த்து பிறகு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி முடித்த பிறகு சிவபெருமானுக்கும் பார்வதி அம்மனுக்கும் இந்த தீபத்தால் ஆராத்தி எடுத்து இருவருக்கும் பொதுவான இடத்தில் இந்த இரண்டு தீபங்களையும் ஒன்றாக வைத்து விட வேண்டும்.
வீட்டில் வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் சிவன் பார்வதி படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அர்த்தநாரீஸ்வரர் கவசம் என்று இருக்கும் அந்த கவசத்தை பாராயணம் செய்வதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். இந்த வழிபாட்டை கணவனும் செய்யலாம் மனைவியும் செய்யலாம் அல்லது அவர்களுடைய இரத்த பந்தங்கள் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:சுக்கிர யோகம் உண்டாக வழிபாடு
மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அர்த்தநாரீஸ்வரியின் அருளால் தம்பதிகள் ஒற்றுமையுடனும் சிறப்பாகவும் வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.