ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கைப்பக்குவம் என்பது இருக்கும். ஒரே துவரம் பருப்பை போட்டு ஒரே பொடியை போட்டு சாம்பார் செய்தாலும் வீட்டில் அம்மா செய்வதற்கும், மனைவி செய்வதற்கும், மகள் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். இது அவரவர்களின் கைப்பக்குவத்தை பொறுத்தே அமைகிறது. அதே போல் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பொறுத்தும் சுவை என்பது மாறும். கிராமத்தில் இருப்பவர்கள் செய்யக்கூடிய சாம்பார் என்பது வேறு சுவையுடன் இருக்கும். அதே போல் நகரத்தில் இருக்கக்கூடியவர்கள் செய்யக்கூடிய சாம்பார் வேறு சுவையில் இருக்கும்.
நாம் சாப்பாட்டிற்கு சாம்பார் செய்வதாக இருந்தாலும் டிபனுக்கு சாம்பார் செய்வதாக இருந்தாலும் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்து அதற்கேற்றார் போல் பருப்பை போட்டு சாம்பார் செய்வோம். வெறும் நாலே நாலு ஸ்பூன் பருப்பு இருந்தால் போதும் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாலு ஸ்பூன் துவரம் பருப்பை வைத்து கிராமத்து சுவையில் சூப்பரான சுவையான டிபன் சாம்பாரை எப்படி வைப்பது என்றுதான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 4 ஸ்பூன்
வெந்தயம் – 1/2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
கடுகு உளுந்து – ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெரிய வெங்காயம் – 1
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 5 டம்ளர்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
செய்முறை
முதலில் நாலு ஸ்பூன் துவரம்பருப்பை எடுத்து அதை சுத்தமாக கழுவி அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் அரை ஸ்பூன் வெந்தயத்தை போட்டு வறுக்க வேண்டும். வெந்தயம் நிறம் மாறி வாசனை வர ஆரம்பித்ததும் அதில் அரை ஸ்பூன் அளவிற்கு சீரகத்தையும் போட்டு நன்றாக இரண்டும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஆறிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அரை மணி நேரம் ஊறிய துவரம் பருப்பை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் ஒரு பெரிய வெங்காயத்தையும் ஒரு தக்காளியையும் சேர்த்து துவரம் பருப்பு ஊற வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். துவரம் பருப்பை அரைத்த பிறகு அதில் மேற்கொண்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் இவற்றை போட வேண்டும். கடுகும் சீரகமும் பொறிந்த பிறகு அதில் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் இவற்றை போட்டு வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் நிறம் மாறிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு தக்காளியையும் சேர்த்து தக்காளி குழையும் வரை நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக குழைந்த பிறகு அதில் மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த துவரம் பருப்பை அதில் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். மேற்கொண்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது கொதிக்க கொதிக்க கெட்டியாகும் என்பதால் மேற்கொண்டு இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடுங்கள். அவ்வப்பொழுது கரண்டியை வைத்து கலந்து விட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
இது நன்றாக கொதித்து துவரம் பருப்பின் பச்சை வாடை போகவேண்டும். துவரம் பருப்பின் பச்சை வாடை போன பிறகு நாம் ஏற்கனவே வெந்தயம் சீரகம் பொடி செய்து வைத்திருக்கிறோம் அல்லவா அதையும் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும் இப்பொழுது சாம்பார் வாசம் வர ஆரம்பிக்கும் இந்த சமயத்தில் பெருங்காயத்தூள் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை கொத்தமல்லி இவற்றை தூவி நன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். கமகமக்கும் கிராமத்து சுவையில் அருமையான டிபன் சாம்பார் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே:கொத்தவரங்காய் துவையல் செய்முறை
எப்பொழுதும் ஒரே மாதிரி சாம்பார் செய்வதற்கு பதிலாக இப்படி அவ்வப்பொழுது வேறு சுவைகளில் செய்து தருவதன் மூலம் வீட்டில் இருப்பவர்களுக்கு போரடிக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.