இந்த வருடம் ஆவது நம் தலையெழுத்து நன்றாக இருக்காதா? என்று தான் ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்தையும் வரவேற்றுக் கொண்டிருக்கிறோம் என்பவர்கள், சித்திரை மாதம் முதல் நாளான வருகின்ற திங்கட்கிழமை வரக்கூடிய தமிழ் புத்தாண்டு அன்று இந்த தானங்களை செய்ய மறக்காதீர்கள்! தமிழ் புத்தாண்டு நாளன்று இந்த தானங்களை செய்தால், உங்கள் குடும்பத்தின் தலையெழுத்தே மாறுமாம். வாங்க தமிழ் புத்தாண்டு அன்று செய்ய வேண்டிய தானங்கள்! பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை அறிவோம்.
தமிழ் புத்தாண்டு என்பது சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்லும் சித்திரை மாதத்தின் முதல் நாள் ஆகும். இந்த ஆண்டு குரோதி வருடம் முடிந்து விசுவாவசு ஆண்டு துவங்க இருக்கிறது. சித்திரை மாதம் என்றாலே பெரும்பாலும் வெயில் பட்டையை கிளப்ப தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும். சூரிய பகவான் தன் முழு சுயரூபத்தை காண்பிக்க ஆரம்பிப்பதற்குள் மக்களின் நன்மைக்கு நாம் இந்த தானங்களை செய்தால், அந்த ஆண்டு முழுவதும் நன்மைகளாகவே நமக்கு நடக்கும் என்பது நம்பிக்கை.
கோடை வெயிலில் சூரியன் தன் கதிர்களை பளிச்சென்று விரித்து, தகிக்கும் அனலை வீசி சுட்டெரிக்கும். இந்த கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும், அவதிப்படுபவர்களும் மனம் மகிழும்படி நாம் தானங்களை செய்தால் நம் குலம் தழைக்கும். அவர்களின் வயிறை குளிர செய்தால் இந்த ஆண்டிற்குள் புத்திர பாக்கியம் உண்டாகும்.
தெருவோரம் வசிப்பவர்களும், யாசகம் கேட்டு கோவில் வாசலில் அமர்ந்திருப்பவர்களும், வீடில்லாமல் சாலையிலும், பாலங்களுக்கு அடியிலும் தங்கி இருப்பவர்களுக்கும் தேடிச் சென்று உதவி செய்யுங்கள். கோடையில் செய்ய வேண்டிய மிக முக்கியமான தானம் குடை தானம். குடை, செருப்பு, விசிறி ஆகிய இந்த மூன்று தானங்கள் தமிழ் புத்தாண்டு அன்று நீங்கள் மேற்கூறியவர்களுக்கு தானம் செய்தால் சூரிய பகவான் அருளால், உங்கள் குடும்பத்தின் தலையெழுத்தே மாறும்.
மேலும் சித்திரை மாதத்தில் பானையில் தண்ணீர் வைப்பது, தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீரை அல்லது நீர்மோர் தானம் செய்வது போன்றவற்றையும் செய்யலாம். வாரம் ஒரு முறையாவது உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது நீர் மோரை வழிப்போக்கர்களுக்கு தானம் செய்யுங்கள். வீட்டைத் தேடி வரும் ஜீவராசிகளுக்கு கண்டிப்பாக தண்ணீர் வையுங்கள். தண்ணீரை விட சிறந்த தானம் இந்த மாதம் எதுவுமே இருக்க முடியாது. வாயில்லா ஜீவராசிகள், பறவைகள் போன்றவற்றுக்கு மொட்டை மாடிகளிலும், வீட்டு வாசல்களிலும் தண்ணீரை வைத்து அவற்றிற்கு தாகத்தை தணிக்கும் பெரும் தானத்தை செய்யுங்கள். பசுக்களுக்கு கஞ்சி தண்ணீரை வீணாக்காமல் தினமும் தானம் அளிப்பது நல்லது. வாழைப்பழம், பச்சரிசியுடன் கலந்த வெல்லம், கீரை கட்டு, புல் கட்டு போன்றவற்றை பசுக்களுக்கு கொடுக்கலாம்.
இதையும் படிக்கலாமே:
தமிழ் வருட பிறப்பு ரூபாய் நோட்டு பரிகாரம்
கடைசியாக தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். தமிழ் புத்தாண்டு நாளன்று காலையிலேயே குளித்து முடித்து, வீட்டில் பூஜை அறையில் கனி காணுதல் நிகழ்த்தி, பூஜை செய்து வழிபட்டு பின்பு கோவிலுக்கு செல்ல வேண்டும். அன்றைய நாள் பிரார்த்தனைகள் முடிந்த பிறகு, யாராவது ஒருவருக்காவது அல்லது உங்களால் முடிந்த அளவிற்கு எவ்வளவு பேருக்கு செய்ய முடியுமோ, அவ்வளவு பேருக்கு அன்னதானம் செய்யுங்கள். உணவு பொட்டலங்களுடன், தண்ணீர் பாட்டில்களை வாங்கி கொடுங்கள். கொடுக்க கொடுக்கத்தான் உங்களுக்கு வந்து சேரும் என்பதை மனதில் கொண்டு மனம் உவந்து முழு மகிழ்ச்சியுடன், திருப்தியுடன் மேற்கூறிய தானங்களில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள், நல்வாழ்வு பெறுங்கள்.